Friday, May 18, 2007

Tuesday, November 11, 2003

அம்மா மண்டபம் - சிறுகதை

1


நவம்பர் பத்து.
அம்மா மண்டபத்திற்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும். அடிக்கடி ஸ்ரீரங்கம் வந்து இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ இருக்கும்போது மனது கிடந்து அடித்துக்கொள்ளும். ஆனாலும் எதோ ஒன்று என்னை அங்கே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். என்னவென்று தெரியவில்லை. இன்று எல்லா நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு வந்துவிட்டேன். வெளியில் இருந்து பார்த்தபோது ஒரு சில மாற்றங்களைத்தவிர அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. கல்லில் செதுக்கப்பட்ட அனுமார் சிலை இருந்தது. அதை ஒட்டிக் கடை. விபூதி, பூணூல், சில சாமி படங்கள் என வரிசையாய்ப் பரப்பப்பட்ட நடைபாதையைத் தாண்டி ஒரு பூக்கடை. அதில் நிறைய மாலைகள் இருந்தன. சில மாலைகள் கடவுளூக்குச் சார்த்தப்படலாம். சில இறந்தவர்களின் உடலுக்குச் சார்த்தப்படலாம். அப்படி நினைத்ததுமே ஒரு அருவருப்பு என் மனதில் ஒட்டிக்கொண்டது. நான் வெளியில் நின்று பார்ப்பதை மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் பார்ப்பது போலத் தோன்றியது. என் பிரமையோ? மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே செல்ல எத்தனித்தேன்.

ஆற்றில் இருந்து குளித்துவிட்டு வெளியே வருபவர்களின் பாதங்களில் இருந்த மணற்துகள்கள் அந்த கல்மண்டபத்தின் தரை மீது பரவி இருந்தது. பொதுவாக மண்டபத்தின் உள்ளே செல்லும்போது செருப்பு அணிந்து செல்வது இல்லை. அந்தத் துகள்கள் காலில் பட்டதும் என் மனம் ஏதோ அருவருப்பாய் உணர்ந்தது. ஒரு வித மயிர்க்கூச்சம். இதே கூச்சம் பழைய கோவில்களின் உள்ளே செல்லும் போதும் எனக்கு ஏற்படும். என் காலில் ஒட்டியிருந்ததை நீக்கும்பொருட்டு என்னையும் அறியாமல் காலை தட்டிக்கொண்டே நடந்தேன். அவை மனதில் ஒட்டிக்கொண்ட நினைவுகள் போல விழாமல் இருந்தன. அவற்றைக் கடந்து ஆற்றின் மணற்பகுதிக்கு வந்தேன். மணலில் கால் பட்டதும் என்னால் என்னவென்று சரியாய்ப் புரிந்துகொள்ளமுடியாத ஒருவித உணர்ச்சி மேலோங்கியது. சுற்றிலும் ஆங்காங்கே சவரம் செய்யும் கடைகள் என்பது போல வெறும் நாற்காலிகள் சில இருந்தன. ஒரு சில நாற்காலிகளில் சிலர் சவரம் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். எதிரே சிறிது தள்ளி சிரார்த்தம் செய்யப்பட்டு இலையில் வைக்கப்பட்ட பிண்டங்கள் சிதறி இருந்தன. சிறிது சிறிதாய் மணலால் செய்யப்ப்பட்ட மட்பாண்டங்கள் பரப்பிக்கிடந்தன. அப்போதெல்லாம் இதை எடுத்துதான் விளையாடுவோம். வீட்டில் அதைத் தொடுவதே பாவம் என்று அலறுவார்கள். இப்போதெல்லாம் யாரும் அதை எடுத்து விளையாடுவதில்லையா என்ன?

காவேரியின் நீரோட்டம் என் கண்களில் தெரிய ஆரம்பித்தது. கரையைத் தொட்டபடி செல்லும் அந்த நீரோட்டம் பார்த்த போது நான் எதையோ இழந்தது போல இருந்தது. எதை இழந்தேன். தெரியவில்லை. ஆனாலும் மனதில் சோகத்தின் தடம் அழுத்தமானதாக இருந்தது. அவற்றை ஒதுக்க முடியவில்லை. எந்தவிதக் கவலையில்லாமல் கள்ளமற்றச் சிரிப்புடன் குழந்தைகள் கரையோரமாய்க் குளித்துக்கொண்டிருந்தார்கள். எப்போது தொலைத்தேன் இந்த கள்ளமற்றச் சிரிப்பை? கல்லால் ஆன படிகளில் கால் வைத்தேன். அதன் குளுமை உச்சியைத் தாக்கியது. அடுத்தடுத்த படிகளில் கால் வைத்து நீரில் இறங்கினேன். நீரோட்டம் அதிகம் இல்லை. ஆனாலும் காவேரியில் கால் வைத்திருக்கிறேன் என்ற எண்ணமே எனக்கு அளவில்லாத சந்தோஷம் தந்தது. என்ன அது நினைவு? அந்த சந்தோஷத்தை முழுமையாக உணரமுடியாமல்? இப்போது தெரியவில்லை என்று பொய் சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. இப்போதென்றில்லை. எப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் என்ற பெயர் கேட்கிறேனோ எப்போதெல்லாம் காவேரியின் நினைவு மனதில் வருகிறதோ அப்போதெல்லாம் வெளியில் சொல்லமுடியாத அந்த கழிவிரக்கம் என்னைத் தொற்றிக்கொள்ளும். நீரில் இரண்டு கால்களும் படுமாறு அந்தக் கற்படிகளில் அமர்ந்துகொண்டேன்.

எப்படி நடந்தது அது? இன்னும் விடைதெரியாத கேள்விதான் அது. நட்பில் ஆரம்பித்த அந்தப் புள்ளி என் வாழ்க்கையையே துரத்தும் தவறில் முடிந்தது எப்படி? எனக்குள் இருந்த மிருகம் என்னை மீறி வெளி வந்தது எப்படி? ஒருவேளை அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காதத்தான் எனது அன்றைய மற்ற வேஷங்களோ? இப்போதும் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. அதனால் தான் வேறேதோதோ காரணங்களை நானாகக் கற்பித்துக்கொண்டு அம்மாமண்டபம் வர தவிர்த்தேனோ? இருக்கலாம். நீரலைகளின் திசையில் என் நினைவலைகளும் நீந்தத் தொடங்கியது. நான் நானாகவும் வேறாகவும் இருப்பது போல ஒரு உணர்வு என்னைத் தொற்றிக்கொள்ள , நான் அமைதியாய் அந்த வேறைப் பார்க்கத் தொடங்கினேன்.


எத்தனையோ நண்பர்கள் இருந்தும் எனது அலைவரிசையில் எனக்கென என்னுடன் வாதிட என் எண்ணங்களைப் புரிந்துகொள்ள எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள, ஒரு பெண் துணைக்கு நான் எங்கிக்கொண்டிருந்த நாள்கள் அவை எனச் சொல்லலாம். மின்னல் போல் வந்தாள் எனச் சொல்லலாமா? சொல்லலாம். சந்தேகமே இல்லை. அப்படி ஒரு ஈர்ப்பு. எதைச்சொன்னாலும் அதிரடியாய் ஒரு கருத்து. ஒரு பெண்ணால் அப்படிச் சிந்திக்கமுடியுமா என்ற கேள்வியிலிருந்தே நான் வெளிவந்த பாடில்லை. ஏதோ என்னைப்போல் யாரும் இங்கில்லை என்னும் என் எண்ணத்தை உடைக்கும் முகமாவே அவள் வந்தது போல எனக்குத் தோன்றும் அப்போது.

"என்ன சார்.. கவிதைலாம் எழுதுவீங்களாமே? எங்க ஒரு கவிதை சொல்லுங்க கேட்கலாம்? "

யாரிவள் என்று யோசிக்கும் முன்னரே அவள் தொடர்ந்தாள்.

"யாருன்னு பார்க்றீங்களா? அது எதுக்கு உங்களுக்கு.. ஒரு கவிதை சொல்லுங்க.. அது நல்லா இருந்தா நான் உங்க ரசிகைன்னு னைச்சிக்கோங்க.. நல்லா இல்லைனா ஏதோ வழியில பார்த்தமாதிரி நினைச்சிக்கோங்க..."

அழகாய் இருந்தாள். ஆனால் அதிகம் பேசுகிறாள். நான் கவிதை எழுதுவேனா என்பது எனக்கே இன்னும் சரியாக பிடிபடவில்லை. ஒருவேளை நான் இரவில் அம்மாமண்டபத்தில் அமர்ந்து எழுதுவதைப் பார்த்திருப்பாளோ? நான் பதில் சொல்லாமலேயே யோசித்துக்கொண்டு இருந்ததைப் பற்றி அவளும் யோசித்திருக்க வேண்டும்.

"என் பேரு ஸ்ரீமதி. எல்லாரும் சுருக்கமா ஸ்ரீன்னு கூப்பிடுவாங்க. எனக்கு இந்த கவிதை கதைலல்லாம் கொஞ்சம் ஆர்வம் உண்டு. உங்களப்பத்தி உங்க மாமா சொன்னாங்க. உங்க மாமாவும் எங்க அப்பாவும் ரொம்ப ·பிரண்ட்ஸ். இந்த வழியாப் போனேன். உங்க வீடு கண்ணுல பட்டது. சரி பார்த்து ஒரு கவிதையைக் கேட்டுட்டுப் பாராட்டிட்டுப் போனா கொஞ்சம் சந்தோஷப்படுவீங்களேன்னு வந்தேன்"

மூச்சு விடாமல் அவள் பேசுவதே ஒரு கவிதை மாதிரி இருந்தது. கண்ணும் பேசுவது போல உணர்ந்தேன். என் மனதின் கடிவாளங்களைக் கட்டிப்போட்டேன். பதில் சொன்னேன்.

"நான் என் கவிதைகளை யாருக்கும் சொல்வதில்லை. அவை எனக்கானவை. என் மனதின் படர்க்கை நிலை.படித்துவிட்டு நீங்கள் புகழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனக்கு. தவிர என் மனதின் உறுத்தல்களைக் கவிதையாக்கிக் கொச்சைப்படுத்தி விட்டதாய் நீங்கள் அலறக்கூடும். அதைத்தவிரவும் என் கவிதைகளை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் என்னை கவரவில்லை. அதனால்..."

"நீங்க பேசுறதே தமிழ் தானான்னு சந்தேகமா இருக்குது.. இதுல கவிதை எங்க புரியப்போகுது. நமக்கு வர்றதெல்லாம் காதல், இயற்கை பற்றிய கவிதைகள்தான். அதை விடுங்க. எங்க காலேஜ்ல ஒரு கவிதைப் போட்டி இருக்குது. எனக்கு ஒரு கவிதை எழுதிக்கொடுங்க. ப்ளீஸ்.."

நான் சொன்ன பதில் அவளின் முகத்தில் அறைந்திருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு அவமானமாக இருந்தது. என்ன இவள் இத்தனை சுலபமாய் ஒரு கவிதை கேட்கிறாள். எனக்குள் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. என்னால் கோபத்தைஅதிகம் வெளிக்காட்ட முடியவில்லை. யாரென்றே தெரியவில்லை. முதலில் மாமாவிடம் சொல்லிவைக்கவேண்டும் என் புகழ் அதிகம் பாட வேண்டாம் என்று.

"எனக்கு இயற்கை பற்றியெல்லாம் கவிதை வராது. என் கவிதை கோபம் பற்றியது. தனி மனித உணர்வுகள் பற்றியது. அதில் தீப்பொறி இருக்கும். பனித்துளி இருக்காது. தவிரவும் உன் செய்கை உன்பால் ஒரு இனம் தெரியாத கோபத்தை ஏற்படுத்துகிறது. எப்படிப் பேசவேண்டும் என்ற முறைதெரியாதா உனக்கு?"

"என்னவோ ரொம்ப திட்டுறீங்களே? என் கேரக்டர் இதுதான். உங்களுக்காக நான் மாத்திக்கமுடியுமா? முறைனு சொல்றீங்க.. முதல் தடவையே உனக்குன்னு ஒருமையில பேசுறீங்களே..? நான் தப்பா பேசுனா மன்னிச்சிடுங்க. ஏதோ ஒரு ஆர்வத்துல அப்படி ஆயிப்போச்சு. எனக்கு பனித்துளின்ற தலைப்புல ஒரு கவிதை வேணும். ப்ளீஸ்.. நாளைக்கு வர்றேன். ... வரட்டுமா கோபக்காரக் கவிஞரே..."

என் பதிலுக்காய் காத்திராமால் வந்த வேகத்தில் சென்று விட்டாள். என்ன பெண் இவள்? ஏதோ ஒரு இனம் தெரியாத கோபமும் அதற்குள்ளாய் ஒரு சுகமும் இருப்பது போல இருந்தது. எனக்கு பெண்கள் அதிகம் பழக்கம் இல்லாத காரணத்தினால் இப்படி இருக்குமோ? அல்லது அவளது அழகு அடித்துபோடுகிறதா? மிகத்தீர்மானமாய் சொல்லிக்கொண்டேன். என்னை அவள் கவரவே இல்லை என்று.

நீரின் அலைகள் காலில் மோதி என் சுய இருப்பை உணர்த்திகொண்டிருந்தன. எத்தனை வேகமாய் மறுத்தேனோ அத்தனை வேகமாய் அவளுக்காய் ஒரு கவிதை எழுதித்தந்ததும் அவள் அதை பாராட்டியதும் நினைவுக்கு வந்தது. மெல்ல மெல்ல எங்கள் நட்பு வளரத்தொடங்கியது. எத்தனை முறை இதே இடத்தில் அமர்ந்து பேசியிருப்போம். உண்மையில் நான் நினைத்த அளவுக்கு அவள் முட்டாளாய் இருந்திருக்கவில்லை எனபது எனக்குப் புரியத் தொடங்கியது. ("நீங்க எப்பவும் அடுத்தவங்கலை அண்டர் எஸ்டிமேட் செய்றீங்க"என்பாள்) அவளுக்கும் கவிதை பற்றிய அறிவு இருந்ததாகவே பட்டது. எத்தனை அழகான விமர்சனங்கள். எப்படிப்பட்ட விவாதங்கள்.

எல்லாம் பொய்யோ? ஒரு பலகீனமான சந்தர்ப்பத்திற்கான தேடுதலின் முன்னேற்பாடுகளோ? எப்படி நடந்தது என்னை மீறி.. எத்தனை முறை சொன்னேன்.. வெறும் நட்பு என்று.. எல்லாம் என் மிருகத்தனத்தை மறைக்கும் பொருட்டேவா? என் உள் நெஞ்சில் ஒரு சிறிய தீப்பொறியாய் இருந்துகொண்டே இருந்தாளோ? நான் நட்பு மட்டும் தான் என்று சொன்னபோதெல்லாம் அவளும் அது மட்டும் தான் என்று சொன்னதெல்லாம் அந்த ஒரு மிடத்தில் மறந்தது எப்படி? கேவலமாய் இருந்தது. அந்த சந்திரகிரகண இரவில் எதன்பொருட்டு இந்த அம்மா மண்டபத்திற்கு வந்தாள்? அதுவும் அந்த சந்திரகிரகணகத்தில்... நிலாவைக் கூட என்னால் பார்க்கமுடிவதில்லை. குறுகுறுத்துப் போகிறேன்.

ஸ்ரீரங்கத்தின் கோபுரங்கள் விண்ணைத் தொட்டுகொண்டு நின்றன. அதைப் பார்க்கவே மிரட்சியாக இருந்தது. ஏனப்படி? பயத்தைஎல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்துகொண்டே இருந்தேன். எத்தனை உயரமாய் எத்தனை கம்பீரமாய் தன் இருப்பில் ஒரு மமதையுமாய் இருக்கிறது. என் எண்ணங்கள் இப்படி இருக்கும்போதே திடீரென அதில் ஒரு ஜோடி கண்கள் தோன்றி மறைவது போல இருந்தது. எனக்குள் பலமாய் அதிர்வுகள். யாருடைய கண்கள் அவை? எங்கோ பழக்கப்பட்ட கண்கள். அதற்கு மேலும் அந்த கோபுங்களைக் காணும் சக்தி இல்லை என் நெஞ்சில்.. ஆனால்.. யாருடைய கண்கள் அவை? ஏன் தோன்றி மறைகின்றன? எல்லாம் வீணே என் குழப்பங்களோ? மனதை ஒருமுகப்படுத்தி மீண்டும் பார்த்தபோது கோபுரம் மட்டுமே இருந்தது.

கண்களை கோபுரத்திலிருந்து காவேரி நீரின் பால் திருப்பினேன். எந்தவித சலனமுமில்லை. ஏன் என் வாழ்க்கை இப்படி இல்லாமல் போயிற்று. நிம்மதியில்லாமல் ஏதோ ஒன்று எப்போதும் என்னை உற்று நோக்குவதாய் என் பின்னே தொடருவதாய்.. எனிப்படி? அந்த நிமிடங்கள் என் வாழ்வில் கழாதிருந்திருக்கலாம். அதற்குப் பின்தான் நான் எத்தனை கோழை என்றும் எத்தனை மிருகம் என்றும் எனக்குத் தெரிந்தது.

நான் உன்னைத் தொட்டபோதே என்னை கோபமாய் விலக்கி இருக்கவேண்டும். ஏன் அமைதியாய் இருந்தாய். உனக்குள்ளேயும் வேறேதேனும் எண்ணங்கள் இருந்ததோ? ஆனால் எல்லா முறையும் காதல் இல்லை என்றுதானே சொன்னாய். பின் எப்படி அந்த நேரத்தில் அமைதியாய் இருந்தாய். எனக்குள் எப்படி அந்த தைரியம் வந்தது என்பதும் எனக்குப் புரியவில்லை.

அம்மாமண்டபத்தின் படிக்கட்டுகளில் அந்த சந்திரகிரகணத்தில் நாமிருந்த அந்த நெருப்பு நிமிஷங்கள் என் வாழ்க்கையின் மற்ற எல்லா மோசமான நிமிஷங்களையும் விட மோசமானவை. உன்னை விலகும்போது எனக்குள் குற்ற உணர்வின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது. உன் கண்ணைப் பார்க்கக்கூட முடியாத கோழையாய், எழுதிய கவிதைகளைக் கூட அப்படியே இந்தப் படிகளில் விட்டுவிட்டு நான் எழுந்துசென்றபோது உன் கண்கள் என் முதுகையே வெறிப்பதை அறிந்துதான் இருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கத் திடமில்லை என் நெஞ்சில்.


ஸ்ரீரங்கத்தின் கோபுரத்தில் தெரிந்த கண்கள் உன் கண்களோ? ஆமாம். சந்தேகமே இல்லை. அவை உன் கண்களேதான். அந்த நினைப்பே எனக்கு சொல்லவல்லாத பயத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. நீ இன்னும் எங்கோ இருந்து என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாயோ? இருக்காது. அப்படி ஒரு எண்ணத்தை நான் யோசிக்கும் நிலையில் கூட இல்லை. என்னால் வந்து உன்னைக் காண முடியாது. மனதளவில் எத்தனை கோழை நான் என்பது எனக்கு மட்டுமே தெரியும். மீண்டும் இதுபோல் கோபுரத்தில் கண்ட கண்களை நேரில் காண முடியாது. இனியும் மண்டபத்தின் படிகளில் இருப்பது சாத்தியமில்லதாகப் பட்டது எனக்கு. கால்களை நீரில் இருந்து இழுத்துக்கொண்டேன். ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை. படிகளை ஒவ்வொன்றாய்க் கடந்து மணற்பரப்பு வரும்போது என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தக் கற்படிகளை மீண்டும் காணவேண்டும் போல தோன்றியது. ஆனாலும் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே மண்டபத்தில் இருந்து வெளியில் வந்தேன். இனி இம்மண்டபத்திற்கு வருவதில்லை என்று தீர்மானமாய் நினைத்துக்கொண்டேன்.

2


நவம்பர் 11

எத்தனை நிகழ்வுகள். நடந்ததெல்லாம் இந்த அம்மா மண்டபம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும். துள்ளித் திரிந்த காலங்கள் போய் விட்டது. எதையும் எடக்காய் கேள்வி கேட்கும் பருவங்கள் மறைந்து நாளாகிவிட்டது. ஜனனி வந்தபின்னே எல்லாம் அவளாய் மாறியாகிவிட்டது. வேறு எதைப்பற்றியும் நினைப்பு இல்லை.

அம்மாமண்டபத்தின் உள்ளே செல்லும்போது பழைய நினைவுகள் வந்து நெஞ்சில் மோதுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்ததிரத்தின் தவறான திசைகளில் நான் நடந்த நாள்கள் அவை. கவிதை என்றுதானே தொடங்கியது. பின் எப்படி அது என்னை இழப்பதில் முடிந்தது என்பது இன்னும் பிடிபட்டபாடில்லை. என்னை அறியாமல் என் மனதின் ஆழத்தில் காமம் அப்பிக்கிடந்ததோ?

எப்படியும் அதற்குப்பின்னும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு நாள் திடீரென வந்து என்னைக் கூட்டிச்செல்வாய் என்று. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவே இல்லை. நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடந்தபோதுதான் உண்மை வாழ்க்கை வேறு கற்பனை வாழ்க்கை வேறு என்பது புரியத்தொடங்கியது.

அந்தச் சந்திரகிரகணம் என் வாழ்க்கையையே இருட்டாக்கும் என்பது நான் அறிந்திராத ஒன்று. முதலில் தொட்டபோதே உன்னை முழுவதுமாய் புறக்கத்திருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல் உருகியது தவறு. என் மனத்திற்குள்ளே எங்கோ ஒரு மூலையில் இதற்கான ஒரு காலகட்டத்திற்காக ஏங்கி இருந்திருப்பேனோ? கவிதை கதை என்ற காரணம் காட்டி உன்னைச் சந்திக்க வந்ததெல்லாம் சாக்கா? என்னை நானே ஏமாற்றிக்கொள்ள எத்தனித்ததின் வெளிப்பாடுகளா? எல்லாமே அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானா?

இன்னும் கூட நீ சொன்ன அந்த பனித்துளி கவிதை என்னுள் இருக்கிறது.

சற்று முன் நான் உன்னை முத்தமிட்டபோது
பார்த்துவிட்டப் புற்களை
யாரிடமும் சொல்லக்கூடாதென மிரட்டியிருக்கிறேன்
உண்மையில் பயந்துவிட்டன அவை
ஐயமெனில் நாளைக் காலை சென்று பார்
அவற்றின் உடலெங்கும் வேர்த்திருக்கும்

எத்தனைச் சந்தோஷமாய் இருந்தது எனக்கு. இது எனக்காக எழுதப்பட்டக்கவிதை. இன்னும் சொல்லப்போனால் நீ முதன்முதலாய் இயற்கை பற்றி எழுதிய கவிதையும் கூட. எத்தனைச் சந்தோஷமான நாள்கள் அவை. எத்தனை விஷயங்கள் பற்றி பேசியிருப்போம். எல்லாவற்றிலும் ஒரு தீர்மானமான எண்ணம் உனக்கு. ரொம்பப் பெருமையாக இருக்கும் உன்னைப் பார்க்கும்போது. உன்னைப்பற்றி நினைக்கும்போது. உன்னைப் பற்றிப் பேசும்போது.

அப்படி ஒரு பொழுதை நினைத்துதான் அந்தச் சந்திரகிரகண இரவில் அம்மா மண்டபம் வந்ததும். அதற்குபின் நடந்தவைகளுக்கு யார் பொறுப்பு என்று யோசிப்பது முட்டாள்தனம். ஆனால் நீ போன விதம் இன்னும் என் நெஞ்சில் புகைந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு குற்றவாளியாய் உன்னை நினைத்துகொண்டிருக்கலாம். உனக்கும் தெரியும் அதில் எனக்கும் பொறுப்பு உண்டென. அதற்குப் பின் என்னைப் ஒருமுறை ஒரே ஒரு முறையாவது பார்த்துவிட்டுச் சென்று இருக்கலாம். உனக்குத் தெரியும் என் கண்கள் உன் முதுகை வெறித்துக்கொண்டிருக்கின்றன என்று. எழுந்து சென்ற விதம் நீ செய்யவே முடியாத தவறொன்றை நான் செய்யவைத்துவிட்டதாகச் சொல்ல முனைவது போல இருந்ததே. எனக்குள்ளாய் ஒரு சந்தேகம். ஜனனி பிறந்த மாதிரி, உண்மையிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றா அல்லது அந்த நிமிடத்திற்காகத்தான் காத்திருந்தாயா? இதே சந்தேகம் எனக்குள்ளுளே என்னை நோக்கியும் இருப்பதை அறிகிறேன்.

உன்னைத் தேடிபிடித்து எனக்கு வாழ்க்கை தரவேண்டும் என்று போராடியிருக்க முடியும். உன்னைத் தாலி கட்ட வைத்திருக்க முடியும். ஆனால் அதில் இஷ்டமில்லை . நீ என்னை எச்சில் படுத்திவிட்டாய்; அதனால் நான் உனக்குத்தான் என்று வாழ்க்கையை உன் காலடியில் சமர்ப்பிக்கும் முட்டாள்தனம் வேண்டாம் உன் நினைவுகளைத் துரத்திவிட்டு வாழ முடியும் என்னால்.

எத்தனை அழகான கணவன். பண்பு தெரிந்தவன். அவனிடம் நான் ஒன்றும் சொல்லாமல் மறைத்துதான் வாழ்கிறேன். கடந்த காலங்களில் செய்த தவறைச் சொன்னால் கூட சிரித்துத் தலையை வருடம் குணம் உண்டு. ஆனால் வாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் அவனையும் உழல விடும் எண்ணம் எனக்கில்லை. இந்த நினைவுகள் என்னோடு போகட்டும். அந்த நிமிடத்தின் கரங்கள் என்னை பிடித்துகொண்டிருப்பதோடு போகட்டும். நான் செய்த தவறை விட இன்னும் இது பற்றி ஒரு வார்த்தைக் கூட அவனிடம் சொல்லாதது இன்னும் அதிகமாய் என் மனதை நெருடுகிறதுதான். இருந்தாலும் சொல்லும் தைரியம் எனக்கில்லை.

அம்மா மண்டபத்தின் அந்த கற்படிக்கட்டுக்களைக்காணும் போது உள்ளே அவமானமாய் இருந்தது. என் கொதிப்பை யாரிடமும் சொல்லமுடியாது. சில சமயம் இந்த நதியில் வந்து நிற்கும்போது எல்லாம் ஞாபகமும் வந்து மீண்டும் எல்லாமே இங்கேயே கரைந்துவிட்டது போல ஒரு உணர்வு வரும். அதற்காகத்தான் இன்றும் வந்தது.

ஜனனி என் கைகளை இறுகப் பற்றியிருந்தாள். அவளைப் பற்றி நினைக்கும்போதே எல்லா சோகங்களையும் மீறி ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த சந்தோஷம் தான் என்னை இன்னும் வாழச் செய்துகொண்டிருக்கிறது.

"அம்மா வாம்மா.. அப்பா ஆத்துல காத்துண்டு இருப்பார். வாம்மா போகலாம்.."

மழலையில் அவள் கொஞ்சல் என்னை ஆற்றுப்படுத்துவது போல உணர்ந்தேன். அவளைக் கூட்டிக்கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தேன். இனியாவது இந்த அம்மா மண்டபத்தின் படிக்கட்டுகள் உட்பட எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று மிகத்தீர்மானமாய் நினைத்துக்கொண்டேன். ஜனனி போதும் எனக்கு. தேவையில்லாத நினைவுகள் வேண்டாம்.


3


நவம்பர் 12.

ஜனனியைத் தூக்கிக்கொண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நதிக்கு வந்தது சந்தோஷமாய் இருந்தது. மனதில் இருக்கும் சோகங்களும் துக்கங்களும் ஜனனியைத் தூக்கித் தோளில் வைத்துக்கொள்ளும்போது மறந்து விடுகிறது. அப்பா அப்பா என்று அவள் மழலையில் அழைக்கும்போது மற்ற எதுவும் தேவை இல்லை என்று தோன்றுகிறது.

அம்மா மண்டபத்தின் படிகளில் அமர்ந்து காவேரியைக் காணும்போது ஏதோ ஒரு சுகம் வரும். நான் விளையாடிய இடங்கள் எல்லாம் காணும்போது எனக்குள் சந்தோஷமா துக்கமா என்று இனம்புரியாத அனுபவம் பரவும். கல்யாணம் செய்துகொண்டு ஸ்ரீயைக் கூட்டிக்கொண்டு முதன்முதலாய் இங்கேதான் வந்தேன். என்னென்னவோ சொல்லிக்கொண்டு வந்தேன். அவள் எதையும் கவனிக்காதது போலத்தான் இருந்தது. திடீரென கண்ணில் நீர் கோர்ப்பதைக் கூடப் பார்த்தேன். நான் வற்புறுத்திக்கேட்ட போது பழைய நினைவுகள் என்று சொன்னாள்.

நான் சந்தோஷமாக இருப்பதாகத்தான் நினைத்துக்கொள்வேன். ஆனால் ஸ்ரீயை நினைக்கும்போது ஒரு சில சமயம் பயமாய் இருக்கும். ஒரு சில சமயம் பாவமாய் இருக்கும். உண்மையில் அவள் அழகில் மயங்கித்தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னேன். நிச்சயிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழித்துதான் திருமணம் நடந்தது. நிச்சயித்தின் போது அவள் முகத்தில் இருந்த அந்த ஒரு கபடமற்ற தன்மை திருமணத்தின் போது இருந்ததாகத் தெரியவில்லை.

என்ன இருந்தாலும் என்னிடம் சொல் என்று எத்தனை முறை வற்புறுத்தி இருப்பேன். ஒன்றும் சொன்னதில்லை. எப்போதும் போல ஒரு சிரிப்பு. அப்படிக் கேட்ட நாள்களில் மிகுந்த சந்தோஷமாய் இருப்பது போலக் காட்டிக்கொள்வாள். அது அதிகம் செயற்கைத்தன்மையுடன் கூடியதாய் இருக்கும். என்ன இருக்கிறது அவள் மனதில்? தெரியவில்லை.

எங்களுக்குள்ளே ஏதோ ஒரு இடைவெளி இருப்பது போலத் தோன்றும். ஏதோ ஒரு மெல்லிய கோடு எப்போதும் பிரிப்பதாய்த் தோன்றும். எல்லாம் பிரமை என்றும் தோன்றும். ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று எல்லாரும் சொன்னபோது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஜனனி வந்த பின்பு அவள் உலகமே ஜனனி என ஆகிப்போனதோ? எனக்கென அவள் மனதில் என்ன இடம் கொடுத்திருக்கிறாள் என்பது இன்று வரை விடைதெரியாத புதிர்.

என்னவோ ஒரு இனம் புரியாத அன்பும் பாசமும் அவள் மேல் எனக்கு இருப்பதாகத் எப்போதும் தோன்றும். இதை என்றேனும் ஒரு நாள் அவள் புரிந்துகொள்ளக் கூடும். என்றாவது ஒரு நாள் என்னைக் கட்டிக் கொண்டு கதறக் கூடும். அந்த நாள் வரையில் என்னால் காத்திருக்க முடியும்.

"அம்மா காத்திண்டு இருப்பா. வா.. ஆத்துக்குப்போகலாம்.."ஜனனி சொன்னபோதுதான் என் சுய நினைவே திரும்பியது போல இருந்தது.

காவேரி சலனமில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தது.. அதைப் பார்க்கும்போது மனதில் ஏதோ ஒரு அமைதி தோன்றியது. எழுந்து செல்லவே மனமில்லாமல் இருந்தது. அடிக்கடி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அம்மாமண்டபத்தை விட்டு வெளியே செல்ல எத்தனித்தேன்.

***


அம்மா மண்டபம் அமைதியாக அத்தனையும் கவனித்துக்கொண்டிருக்கிறது. எத்தனை சலசலப்புகள் இருந்தாலும் அவை மனிதர்களுக்கு மட்டுமே. ஆனால் அம்மா மண்டபம் எப்போதும் போல அமைதியாக இருக்கிறது. காவேரி ஆறு சலனமே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. நாளைய வரவுக்காகக் காத்திருக்கிறது.

Sunday, November 9, 2003

தொலைந்து போன பேனா - கவிதை


புதியதல்ல
அரதப் பழசுதான்
ஆனால் என் நினைவுகளில்
அது பேனா அல்ல
நினைவுகளின் தொகுப்பு

அதிகம் தடிமனுமில்லாமல்
அதிகம் ஒல்லியுமில்லாமல்
மசியை எழுத்துக்களாக்கும்
வித்தையைக் கண்டு வியந்ததுண்டு

முதல் கட்டுரை
முதல் கவிதை
முதல் கதை
முதல் காதல் கடிதம்
இப்படி என் எல்லா முதலுமாய்
விரிந்தது அதன் விலாசம்

பிள்ளையார் சுழியிலிருந்து
முற்றிடும் வரை
பக்கங்களில் வழுக்கிகொண்டு
ஓடும் போது நினைப்பேன்
பேனாவல்ல பறவையென்று

ஒவ்வொரு தொடுதலின்போதும்
உச்சத்தின் பரவசம் கண்டு
பெண்ணென உருவகித்து
கிள்ளிச் சோதித்திருக்கிறேன்
முனங்குகிறதோ வென்று

அப்பேனா தொலைந்துபோனது

கசப்பான ஓங்கரித்தல் தரும்
முகச்சுளிப்பு போல
விவாகரத்துப் பத்திரத்தில்
ஒப்பமிட்ட நினைவு

அது தொலைந்ததாகவே இருக்கட்டும்.

Sunday, May 11, 2003

கொஞ்சம் எண்ணெய் வேண்டும் - கவிதை

டயர் உருட்டி விளையாடுகிறான்
சிறுவனொருவன்
காலின் வேகமொத்தது
டயரின் வேகம்.

ஒற்றைக் காலால்
நொண்டி ஆடுகிறாள்
ஒரு கருப்பி.
அவள் நிஜ நொண்டியல்ல.

சதா ஓடிக்கொண்டிருக்கும்
மகனை
திட்டுகிறாள் அம்மா
மகன் கேட்பதாயில்லை.

மைதானத்தின் தரையெங்கும்
விழுந்துக் கிடக்கின்றன
பன்னீர்ப்பூக்கள்
எனக்குப் பிடிப்பதோ
காம்பிழந்தப் பூக்கள்தான்

இஷ்டம் இல்லாத இடத்தை விட்டு
நகரலாம்தான்

நின்று போன
என் சக்கரவண்டி நகர
கொஞ்சம் எண்ணெய் வேண்டும்.

Friday, April 11, 2003

தட்டான் - சிறுகதை

டந்த நாட்களின் நினைவுகள் எத்தனைதான் சந்தோஷம் தருவதாக இருந்தாலும் எங்கேயோ ஒரு இனம் புரியாத சிறிய சோகத்தையும் விட்டுச் சென்று விடுகின்றது. மாட்டு வண்டி சீராகப் போய்க்கொண்டு இருக்கிறது. இப்படி மாட்டு வண்டியில் போய் எத்தனை வருஷங்கள் ஆகின்றன?. இன்னும் மாறாமல் அப்படியே இருந்தன செம்மண் சாலைகள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்பு இதன் வழியே நடந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே. வண்டி வலதும் இடதும் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருந்தது. முன்பெல்லாம் முக்கூடலில் இருந்து ரெங்கசமுத்திரம் செல்லவேண்டுமானால் ஏதெனும் சைக்கிள் வாடகைக்கு வாங்கிச் செல்வோம். அல்லது யாருடனாவது தொத்திக்கொண்டு போவோம். அதற்கு ஒரு சொல்லப்படாத போட்டியே நடக்கும்.

பஸ்ஸில் இருந்து இறங்கியபோது முக்கூடலிலிருந்து ரங்கசமுத்திரத்திற்குச் செல்ல இன்னும அதே நிலைதான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது காய்கறி ஏற்றிச் செல்லும் இந்த மாட்டுவண்டியும் அசிரமத்திற்குச் செல்வதாய் கேள்விப்பட்டதால் இதில் ஏறிக்கொண்டேன். வண்டிக்காரர் அதிகம் பேசவில்லை. மாடுகளின் மீதே குறியாய் இருந்தார். சொந்த மாடாய் இருக்கும்.

மேடு பள்ளங்கள் அதிகம் இருந்ததால் வண்டியில் அதிகம் குலுக்கல் இருந்தது. சில கிராமங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறுவதே இல்லை போல. ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. திரும்பப் பெறமுடியாத மாறுதல்கள். இந்த நிமிடம் இனி கிடைக்காது என நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ ஒரு சோகம் அப்பிக் கொண்டது.


வண்டியின் பின்னால் தொங்கவிடப்பட்டிருந்த சாக்கை எடுத்து கூரையின் மீது போட்டுவிட்டு மெல்ல வெளியில் பார்க்க ஆரம்பித்தேன். காலை நேரத்து வெயில் முகத்தில் அடித்தபோது சற்று உற்சாகம் வந்தது போல இருந்தது. ஆனாலும் எப்போதும் போல எனக்குள் இருந்த இன்னொரு மனது அதை வேகமாய் மறுத்தது. சுற்றுமுற்றும் கட்டடங்களே இல்லை. தூரத்தில் ஆசிரமத்தின் சமையல் அறை மட்டும் தெரிந்தது. நினைவுகள் என்னை அலைகழிக்கத்தொடங்கின. அவற்றை கயிற்றால் கட்டி என்னை நோக்கி இழுப்பது போல கற்பனை செய்து கொண்டேன். என் மனம் ஒரு பெரிய கம்பு போலவும் அதில் பல னைவுகளின் வால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருப்பது போலவும் ஒவ்வொரு நினைவும் ஒவ்வொரு திசை நோக்கிப் பறப்பது போலவும் தோன்றியது. நினைவுகளை திசை திருப்பும் பொருட்டு வண்டிக்காரருடன் பேசலாம் என எத்தனித்தேன்.

'இப்போ அந்த ஆசிரமத்துல யாரு யாரு இருக்கா?"

அவரிடம் இருந்து பதிலே இல்லை. மீண்டும் ஒரு முறை கேட்டேன். அவர் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருந்தார்.

"ரே.ரே.".

செவிடாய் இருக்குமோ?

அப்போது காற்றில் ஒரு வாசம் பரவியது. பல நாட்கள் பழக்கப்பட்ட வாசம். வழியெங்கும் சிறிது சிறிதாய் மஞ்சள் நிறப் பூக்கள் பூத்திருந்தன. இரண்டு பக்கங்களிலும். காணவே மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்ததாய் இன்னும் சிறிது தூரத்தில் தட்டாண்கள் பறக்க வேண்டும். என் உள்மனது சொல்லியது. எத்தனை முறை நடந்த சாலை. உணர்வில் கலந்தவை அந்த வாசமும் அந்தக் காட்சியும். சொன்னாற்போலவே தட்டாண்கள் பறந்துகொண்டிருந்தன. ஒன்றல்ல இரண்டல்ல. நூறல்ல. ஆயிரம் ஆயிரம். சிவப்பு உடலும் கருப்புக் கண்டங்களால் பிரிக்கப்பட்ட வாலும் நிறமற்ற இறக்கையுமாய்த் தும்பிகளின் கூட்டம். என்னால் அதற்கு மேல் என் நினைவுகளைக் கட்டி இழுக்க முடியவில்லை. கம்பில் கட்டப்பட்டிருந்த நினைவுகள் மிகச் சப்தமாய்ச் சிரித்தபடி அறுத்துக்கொண்டு ஓடின. எனக்குள் இருந்த இன்னொரு மனம் சொன்னது.

"அவற்றை விடாதே. பிடி"

நான் அதட்டினேன். சில சமயம் அமைதியாகும். இப்போதும் அமைதியாயிற்று.

"ஏலேய். ஓடிருங்கல. சாமி வருது"ன்னு சொல்லிக்கிட்டே வந்தாரு முருகன் அண்ணாச்சி. பாவம். அவருதான் சாமிகிட்டே எப்பயும் திட்டு வாங்குவாரு. திருப்பி ஒண்ணும் சொல்லமாட்டாரு. கேட்டா சொல்லுவாரு...

"பாவம்ல சாமி. எல்லா அனாதப்புள்ளகளயும் அன்பாப் பாத்துக்குதுல்லா. அது திட்டுனா திருப்பி திட்டுனா பாவம்ல."

சாமிக்கு கோபம் வந்துச்சுன்னா வாயில மூதி மூதின்னு திட்டுவாரு. நாங்க எல்லாரும் ஓடிபோயி கையில ஆளுக்கொரு பொத்தகத்த எடுத்து வெச்சிக்குவோம். சாமி வந்தாரு.

"எல்லா நாயிகளும் சாப்பிட்டீகளால?"

நாங்க எல்லாரும் தலையாட்டினோம்.

"ஒழுங்கா படிக்கணும் கேட்டியளா? எந்த மூதியாவது சேட்டை பண்ணீயளோ. மணிப்பிரம்புதான் பேசும்ல"ன்னவரு எங்களப்பார்த்து, "அந்த மூதி முருகன் எங்கல"ன்னாரு. பதிலு சொல்லுறதுக்கு முன்னாடியே போயிட்டாரு.

அந்த மணிப்பிரம்ப நாந்தான் போயி வாங்கிட்டு வந்தேன். எனக்கு ரொம்ப பெருமயா இருந்திச்சு. யாருகிட்டயாவது சொல்லணும்னு தோணுச்சி. பக்கத்துல பூபதி இருந்தான். அவன்கிட்ட சொன்னேன்.

"மக்கா.அது நான் வாங்குன பிரம்புல".

"அதுக்கு என்னல இப்போ?"

"சாமி என்னய அடிக்கதே ஏ ஹே ஏ ஹே"

"போல மயிரான். ஒன்கிட்ட வந்து எவம்ல கேட்டான் இத?"ன்னுட்டுப் போயிட்டான்.

எழவெடுத்தவன். பொறாமை புடிச்சவன். எனக்கு அதுக்கு மேல படிக்க ஓடல. தட்டாண் புடிச்சி வெளயாடனும்னு தோச்சி. மயிலு எங்க இருக்கான்னு தேடுனேன். ஒரு கல்லுல ஒட்கார்ந்துகிட்டு பொத்தகத்தை தொறந்து வெச்சிகிட்டு வானத்தை பார்த்துகிட்டுக் கெடந்தா. எனக்கு என்னவோ தெரியல. மயிலுன்னா ரொம்ப புடிக்கும். அவளுக்கும் தான். ஆனா எமகாதகி. எப்போ பேசுவா எப்போ திட்டுவான்னே தெரியாது. மெல்ல அவ கிட்டப் போனேன்.

"ஏட்டி. .. வாட்டி போயி தட்டாண் புடிக்கலாம்"

"போல. இப்பதான சாமி சொல்லிச்சு. படிக்கச் சொல்லி"

"நடிக்காதட்டி. எத்தனை தடவ என்கிட்ட வந்து கெஞ்சிருக்க. இப்ப நா கூப்பிட்டா பீத்திக்கிற."

"அப்படித்தாம்ல பீத்திக்குவேன். நீ போல"ன்னுட்டா. எனக்கு கோவம் கோவமா வந்திச்சி.

"இன்னொரு தடவ என்ன போலங்காத. எனக்கு கோவம் வரும்"

"இவரு மகராசா. இவர மரியாதயா கூப்பிடுவாவ. போல வால போல வால போல வால"

"இனிமே என்கிட்ட வந்து என்னைக்காவது கேளூ ஆட்டைக்குச் சேர்த்துக்கோன்னு. அப்பப் பாரு"

"இவரு ஆட்டைக்குச் சேர்த்துக்கலேன்னா எங்க வீட்டுல பருப்பு வேகாதாக்கும்? போல."

எனக்கு ரொம்ப கோவம் வரவும் அவ மண்டயில கொட்டிட்டு ஓடிட்டேன். ஒடனே போயி சாமி கிட்ட சொல்லுவா சிரிக்கி. சொல்லட்டும். நாமளும் ஏதாவது புளுவனும்னு நினைச்சிக்கிட்டே தட்டாண் புடிக்க ஓடிட்டேன்.

இப்பல்லாம் ரொம்ப நாளாச்சு. மயிலு தட்டாண் புடிக்க வந்து. வரவே மாட்டேங்குறா. கேட்டா சாமி கூடாதுன்னு சொல்லிச்சுன்னு சொல்லுதா. எனக்கு கஷ்டமா இருந்திச்சு. மயிலு இல்லாம எனக்கும் தட்டாண் புடிக்கவே ஒடல. அவ கிட்ட கேட்டா பீத்திக்குவா. இருந்தாலும் கேட்டேன்.

"ஏன்ட்டி இப்பல்லாம் என் கூட வெளயாட வரமாட்டேங்க?". பேசாம இருந்தா.

"ஏட்டி கேக்காம்லா."கொரல ஒசத்தி சொன்னேன். திரும்பி மொறச்சிப் பார்த்தா. மெல்ல சொன்னா.

'எலேய். சாமி திட்டுதுல. என்னய கூப்பிடாதல"

"எதுக்குட்டி திட்டுது. எத்தன தடவ வந்திருக்க. இப்ப மட்டும் ஏன்ட்டி புளுவுத? வர புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்லுட்டி"

அவளுக்கு கோவம் வந்துட்டு. அவளும் கோவமா சொன்னா.

"ஆமால. எனக்கு ஒண்ய புடிக்கல. இனிமே என்ன கூப்பிடாத . இன்னொரு தடவ கூப்பிட்டா சாமி கிட்ட சொல்லிப்புடுவேன்"

"ரொம்ப மிரட்டாதட்டி. சாமின்னா பயந்துருவோமாக்கும். போட்டி"ன்னு சொல்லிட்டுப் போயிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு அவளா வந்தா. என்கிட்ட கெஞ்சிறமாதிரி கேட்டா.

"ஏல ஏல தட்டாம் புடிக்க நானும் வரேம்ல. என்னயயும் சேர்த்துக்கோல."

எனக்கும் ஆசயா தான் இருந்திச்சி. ஆனா ஒரு பொட்டச்சி என்னல்லாம் பேசுனா. நாம ஆம்பள. அவள அளவிட்டாத்தான் அவளுக்கு அறிவு வரும்னு தோணுச்சி.

"இப்ப மட்டும் சாமி திட்டாதோ? போட்டி. என் கூட பேசாத"ன்னுட்டுப் போயிட்டேன்.

அன்னிக்கு பூரா சுத்தி வந்தா. நா ஆம்பள. எனக்கு எத்தன இருக்கும். அவ கூடப் பேசவே இல்ல.அவ அளுதுருவா போல இருந்திச்சி. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. அளட்டும் மூதி. நல்லா அளட்டும். அப்பதா அறிவு வரும். இப்ப இப்படிப் பண்ணாதான் இனிமே வெளயாடக் கூப்பிட்டா ஒடனே வருவா. பூபதியும் ஆமான்னான். இப்பல்லாம் பூபதி என்கூட நல்லா பேசுதான். மொதல்ல நெனச்சா மாதிரில்லா இல்ல. நல்லா பழகுதான். நாந்தான் தப்பா நெனச்சிட்டேன் போல இருக்கு.

சாயங்காலமா பூபதி வந்து சொன்னான்.

"எலேய். ஒண்ண சாமி கூப்பிடுதுல"

எனக்கு பயமாப் போச்சி.

"எதுக்குல?"

"எனக்கு என்னல தெரியும். கூப்பிட்டாப் போல"

நேத்து வரைக்கும் நல்லா பேசுனவன் இப்ப எடக்கா பேசுற மாதிரி இருந்திச்சி. நாம மொதல்ல நெனச்சதுதான் சரி. ரெண்டாவது நெனச்சதுதான் தப்புன்னு நெனச்சிக்கிட்டேன். எனக்கா பயமா வேற இருக்குது. சாமி கூப்பிட்டாருன்னா கண்டிப்பா மணிப்பிரம்புதான்.
பயந்துகிட்டே மெல்ல போனேன். பின்னாடியே அந்த மாக்கான் பூபதி ராகமா பாடிக்கிட்டே வந்தான்.

"எம்மாடி எய்யாடி எனக்கெல்லா தெரியாதே. எம்மாடி எய்யாடி எனக்கெல்லா தெரியாதே."

எனக்கு கோவத்துல வாயில நல்லா வந்திருச்சி."தாயோளி.சும்மா இருல."ன்னுட்டு மண்டயில ஒரு தட்டு தட்டினேன். அம்புட்டுதான். என்னவோ எழவு விழுந்தமாதிரி கத்திக்கிட்டே சாமி ரூமுக்கு ஓடினான். எனக்கு ரொம்ப பயம் ஆகிபோச்சு. கொஞ்சம் தைரியத்த வரவழச்சிக்கிட்டு என்ன புளுவலாம்னு யோசிச்சிக்கிட்டே சாமி ரூமுக்குப் போனேன்.

அவரு நாற்காலியில சாஞ்சி ஒட்கார்ந்துகிட்டு இருந்தாரு. பக்கத்துல பூபதி ஒப்பாரி வெச்சிக்கிட்டு இருந்தான். இன்னொரு பக்கத்துல மயிலு நின்னுக்கிட்டு இருந்தா. என்னயப் பாத்த ஒடனே சாமி கூப்பிட்டாரு.

"ஏலே மூதி இங்க வால."

நான் நவலாம அங்கயே நின்னேன்.

"எழவெடுத்தவனே. நா அங்க வந்தேன். ஒன்ன உப்புக்கண்டம் போட்ருவேன்"ன்னாரு.

எனக்கு பயத்துல என்ன பண்ணுறதுன்னே புரியல. அந்த திமிரு புடிச்சவ வாயப் பொத்திக்கிட்டு சிரிச்சா. சாமி அவளயும் அதட்டிச்சி.

"ஏட்டி.சும்மா கெடட்டி"

நான் அவரு பக்கத்துல பயந்து பயந்து போனேன்.

"நாயி ஒனக்கு பொட்டப்புள்ள அவ கூட என்னல சோலி?"

என்னவோ அவ போட்டுக்குடுத்துட்டான்னு மட்டும் தெரிஞ்சது. என்னன்னு தெரிஞ்சா அதுக்கு ஏத்தா மாதிரி புளுவலாம். ஆனா என்னான்னு தெரியாததுனால சும்மாவே நின்னேன்.

"வெளக்கெண்ணெ. வாயத் தொறந்து பேசுல. ஊமயாயிட்டியளோ?"

அவ்வளவு நேரம் சும்மாக்கெடந்த பூபதி நல்ல நேரம் பாத்து ஊதிவிட்டுட்டான்.

"ஆத்தி! என்னமா நடிக்கான்யா?. நீங்க கூப்பிட்டீயன்னு சொன்னா என்ன தாயோளிங்கான்யா. அப்பமட்டும் வாயி வந்திச்சி இப்ப வரலயோ? என்னமா நடிக்கான்யா?"

இன்னியோட செத்தோம்டா சாமின்னு புரிஞ்சி போச்சி. சாமி முருகன் அண்ணாச்சியக் கூப்பிட்டாரு.

"ஏல அந்த மணிப்பிரம்ப எடுல. இந்த மூதி ஒண்ணும் படிக்கவும் மாட்டேங்குது. படிக்கிற புள்ளயலயும் தட்டாண் புடிக்க வான்னு சொல்லி கூப்பிடுது. மயிலு மாதிரி புள்ளக வரலன்னா மிரட்டுது. இதுல கெட்ட வார்த்த வேற. எடுல அந்த மணிப்பிரம்ப. பிச்சிப்புடுறேன் பிச்சி."ன்னாரு.

எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சி. இந்த சிரிக்கி நம்மல நல்லா மாட்டிவிட்டுட்டா. இந்த ஊமக்குசும்பனும் சேர்ந்துக்கிட்டான். எனக்கு என்ன செய்யிறதுனே தெரியல. வேற வழியே இல்லன்னு...

"சாமி தெரியாம செஞ்சிட்டேன். நெசமா சொல்லுதேன். இனிமே செய்யமாட்டேன். சாமி.சத்தியமா செய்யமாட்டேன்"ன்னேன்.

சாமி நம்புற மாதிரியே தெரியல. எனக்கு கோவம் வந்திருச்சி.

"நாந்தான் சாமி சத்தியமா சொல்லுதேங்கல்லா."ன்னு கொரல ஒசத்தி சொல்லிப்புட்டேன். அம்புட்டுதான். சாமிக்கு கோவம் ரொம்ப வந்திடுச்சி.

"ஏலே செறி.. என்கிட்டயே கொரல ஒசத்துதியா நீ? ஒன்னப் பிச்சிப்புட்டுதாம்ல மறுவேல"ன்னு சொல்லிக்கிட்டு மணிப்பிரம்ப எடுக்கப் போனாரு. எவன் செஞ்ச புண்யமோ. ஒரு பிளசரு வந்து நின்னது. சத்தம் கேட்டதும் சாமி பெரம்ப மறந்துட்டு பிளசரப்பார்க்க ஓடுனாரு. பிளசருல இருந்து மயிலோட அத்தயும் மாமாவும் கூட ஒரு அம்மாவும் அய்யாவும் எறங்குனாவ. அத்தயும் மாமனயும் பார்த்த ஒடனே மயிலு மொகத்துல ஈயாடல. என்னியாட்டி போட்டுக்குடுத்த. ஒனக்கெல்லாம் அய்யோ பாவாம்னு பார்த்தா ஆறு மாசம் பாவம்ட்டி. ஒனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நினைச்சிக்கிட்டேன்.

அவுக நாலு பேரும் சாமியும் உள்ள ரூமுக்குள்ளார போயிட்டாக. பூபதி நா அடிப்பேன்னு பயந்துக்கிட்டு ஓடிட்டான். மயிலு பக்கத்துல போனேன். அவ கண்ணுல தண்ணி வர்ற மாதிரி இருந்திச்சி. எனக்கு ஆச்சரியமாப்போச்சி. அளுதா எட்டு ஊருக்கு அளுவா. கள்ளளுவி. இப்போத்தான் நெசமா அளுதா. சத்தமே இல்ல. நல்லா வேணும்னு கைல சைக காமிச்சேன். போல மூதின்னுப் போயிட்டா. இவளுக்கெல்லாம் இது போதாதுன்னு நினைச்சிக்கிட்டேன்.


மறு நா பிரேயருக்கு வரும்போதும் உம்முன்னுட்டுதான் வந்தா. ராத்திரில்லாம் அளுதுருப்பா போல. எனக்கும் கஷ்டமா இருந்திச்சி. அந்த அத்தயும் மாமாவும் கூட வந்த ரெண்டு பேரும் அங்கதான் இருந்தாக. எல்லாத்துக்கும் முட்டாய் கொடுத்துக்கிட்டே வந்தா. எனக்கு ஒண்ணும் புரியல. என்கிட்டயும் கொடுத்தா. நா பையக் கேட்டேன்.

"ஏன்ட்டி அளுவுத?"

பதில் ஒண்ணும் சொல்லல. என்னயப் பார்த்ததும் கூட கொஞ்சம் அளுவுற மாதிரி தோச்சி எனக்கு. பிரேயரு முடிஞ்சி எல்லாரும் போயிட்டாங்க. முருகன் அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன். அவரு சொன்னதக்கேட்ட ஒடனே எனக்கு தூக்கிவாரிப் போட்டுட்டு.

"அவள அந்த அய்யாயும் அம்மாவும் அவுக கூட கூட்டிக்கிட்டு போகப் போறாக. அதுக்கு அவ அத்தயும் மாமாவும் சரின்னு சொல்லிட்டாக. இனிமே அவ அங்கதான் இருப்பா. இங்க வரமாட்டா. இவளுக்கு வேண்டியதெல்லாம் அவுகளே பார்த்துக்குவாக. தையல் எல்லாம் படிக்க வைப்பாக. இவ அந்த அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டு வேலப் பார்த்துக்கிட்டு அங்கயே சாப்பிட்டுக்கிட்டு கெடந்துக்க வேண்டியதுதான்."

எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல.

"இப்ப எதுக்கு அவள அனுப்புறாரு சாமி?"

"எலேய் எத்தனை நாளுல இங்கயே இருக்க முடியும்? எல்லாத்தயும் எல்லா நாளும் இங்கயே வெச்சிக்க முடியுமால? ஒரு ஆளு போனா இன்னொரு ஆள எடுக்கலாம்லல."

இப்படி ஒரு லம வரும்னு நா நெனச்சிகூட பார்க்கல.சாமி மயிலு மயிலுன்னு உசுரயே விடுவாரே. சாமி எப்படி இத செஞ்சாருன்னு நா யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே முருகன் அண்ணாச்சி சொன்னாரு.

"எலேய்.ஒணக்கும் இப்படித்தாம்ல. நாளைக்கு நல்ல ஆளா வந்து ஒன்னிய கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாகன்னா போயிறவேண்டியதுதான். இது என்ன ஒனக்கு பொறந்த எடமால. சாகுற மட்டும் கெடக்க?"

என்னத்தன்னு சொல்ல. எம்புட்டோ சண்டை போட்டோம். ஆனா இன்னைக்கு அவ போறான்னு கேக்கும்போதே கள்ளிப்பால குடிச்சா மாதிரி இருக்கு. எனக்கு ஒண்ணுமே ஓடல. அளுகயா வந்திச்சி. பூபதியும் உம்முன்னு இருக்கான். அவனுக்கு என்ன எளவெடுத்ததோ தெரியல இப்படி இருக்கான்.

அப்படி இப்படின்னு அவ போகப்போற நாளும் வந்திருச்சி. என்னைக்கு போகபோறோம்னு தெரிஞ்சதோ அதுக்கு பொறவு அவ யாரு கூடயும் மொகம் கொடுத்து பேசல. என்கூடயும். நானா வலியப்போயி பேசுனா கூட பேசாமாயே போயிட்டா பலவாட்டி. நானும் வுட்டுட்டேன்.

அப்படி இப்படின்னு... இப்போ போகபோறா. எல்லாருக்கிட்டயும் போயி சொல்லிக்கிட்டா. சாமி கிட்ட சொல்லிக்கிட்டா. சாமி அவள கட்டிப்பிடிச்சிக்கிட்டு அளுதாரு. எனக்கு என்னமோ சாமி நடிக்குதுன்னு தோணுச்சி. இம்புட்டு தூரம் அளுவுனா ஏன் அனுப்பனும்? அவளும் கூடச் சேர்ந்து அளுதா. என்கிட்டயும் வந்து சொல்லிட்டுப் போனா. நா பதிலா ஒன்னும் சொல்லல. சொல்ல முடியல. தொண்டக்குள்ள ஏதோ சிக்கிக்கிட்ட மாதிரி இருந்திச்சி. கண்ணு கலங்குனா மாதிரி இருந்திச்சி. ஆனா அடக்கிட்டேன். ஆம்பளயில்லா. இந்த பூபதி மாக்கான் ஓன்னு அளுதுக்கிட்டே கெடந்த்தான். இவன் எதுக்கு அளுதான்? நானே அளாம நிக்கேன்.

பிளசரு கிளம்பப்போவுது. இவ அர மனசா ஏறி ஒட்காந்திட்டா. நாங்க எல்லாம் பாத்துக்கிட்டே இருந்தோம். எனக்கு தோணுச்சி. நம்மளயும் இந்த சாமி இப்படித்தான் அனுப்பப்போவுதுன்னு. என்னத்த செய்ய முடியும்?

இப்படி நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே பிளசரு கௌம்புறதுக்கு முன்னாடி திடீர்னு வெளிய குதிச்சி ஓடி வந்தா என்கிட்ட. எனக்கு பட படன்னு ஆயிட்டு.

என்னப் பார்த்து சொன்னா.

"எலேய். என்ன மறந்துறாதல. ஒன்ன விட்டுப் போகணுமேன்ற நெனப்பதாம்ல என்னால தாங்கமுடியல. ஏதோ தட்டாண் புடிச்சி வெளயாண்டோம். அவ போயிட்டான்னு இருந்துறாதல. நா பாவம்ல. என்னய மறந்துறாதல. எப்படியும் இங்கயே திரும்பி வந்துருவேம்ல. நீ எங்கயும் போயிறாதல. என்ன மறந்துறாதல."


எனக்கு அதுக்கு மேல அளுகய அடக்கமுடியல. என்னதாம் ஆம்பளன்னாலும்.?

இப்படி நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே எல்லாரு முன்னாடியும் எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு ஓடிப்போயி பிளசருக்குள்ள ஏறிக்கிட்டா. பிளசரு மறையர வரைக்கும் என்னயே பாத்துக்கிட்டு இருந்தா. எனக்கு ஒன்னுமே ஓடல. எல்லாரும் என்னயவே பாத்துக்கிட்டு இருந்தாக. பூபதி இப்போ அளாம வாயத் தொறந்து நின்னுகிட்டு இருந்தான். சாமி ஒண்ணும் சொல்லாம உள்ளார போயிட்டாரு.

சட்டென முகத்தில் ஏதோ தாக்கியது போல இருந்தது. கை தன்னையும் அறியாமல் அதைத் தட்டிவிட அந்தத் தட்டாண் என் மடியில் விழுந்தது. கருப்பு கண்டங்களால் ஆன வாலும் சிவந்த உடலும் நிறமற்ற இறக்கையுமாய் என் மடியில் கிடந்த அதை மெல்ல எடுத்தேன். கண் அருகில் வைத்து நோக்கினேன். பாவமாய் என்னைப் பார்ப்பது போல இருந்தது. அதை வெளியில் தூக்கிப் எறிந்தேன். அது பறக்கமுடியாமல் பறப்பதும் மீண்டும் கீழே விழுவதுமாகத் தத்தளித்தது.

அதுவரை வெளியில் சுற்றிக்கொண்டிருந்த மனதின் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் களைத்துப் போய் மனதிற்குள் அடைவது போல இருந்தது. என்னுள் இருந்த இரண்டாவது மனம் சொல்லியது.

"அதெல்லாம் இல்லை"

எத்தனையோ மாற்றங்கள். எண்ணத்தில் மாற்றம். வாழ்க்கையில் மாற்றம். பேசும் தமிழில் மாற்றம். ஏற்றங்கள். சறுக்கல்கள். எதிர்ப்பார்க்காத சவால்கள். எல்லாம் தாண்டி வரும்போது பத்து ஆண்டுகள் கழிந்திருக்கிறது. கூடவே இந்த இரண்டாவது மனமும் வளர்ந்திருக்கிறது. அவ்வப்போது அது நினைப்பதைச் சொல்லும். பெரும்பாலும் எனக்கெதிராய்ச் சொல்லும். அடக்கினாலும் அடங்காது. அதனால் நான் அமைதியாக இருந்துவிடுவேன்.

வண்டிக்காரர் எனக்குள் நடந்த பிரளயத்தின் சுவடு கூட இல்லாதவராய் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருந்தார்.

"ரே.ரே."

அவர் வேலை அவருக்கு.

இப்போது நான் எதற்காக ரெங்கசமுத்திரம் செல்கிறேன் என்பது எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. அங்கே யாரிருப்பார்கள்? எனக்கு வரவேற்பு எப்படி இருக்கும்? எதுவும் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு உந்துதல் என்னை தொடர்ந்து அங்கே செல்லுமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது. சாமி இருப்பாரா? முருகன் அண்ணாச்சி இருப்பாரா? பூபதி இருப்பானா? தெரியவில்லை. ஆனால் மயிலு இருப்பற்கான வாய்ப்பே இல்லையென்று நிச்சயமாகத் தெரியும். இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை நிம்மதியாய் இருக்கவிடாமல் இங்கே வர வற்புறுத்திக்கொண்டே இருந்தது. மயிலின் நினைவோ? அல்லது அவள் எனக்காக ஆசிரமத்தில் காத்திருப்பாள் என்ற எண்ணமோ? உடனே சிரித்துக்கொண்டேன். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் அதை நினைத்து ஆசிரமத்திற்குப் போகவில்லை என்று எனக்குள் சொலிக்கொண்டபோது என் இரண்டாவது மனது கத்தியது.

"பொய். பொய். அவ இருப்பான்னுதான் போற."

இப்போது அதை அடக்க மனம் வரவில்லை. அதன் கற்பனை கூட இனிமையாக இருப்பது போலத் தோன்றியதால் அதைத் தொடர்ந்து பேச அனுமதித்தேன்.

(இது என் முதல் கதை)

Tuesday, March 11, 2003

நெல்லை தேர்த்திருவிழா

நெல்லையின் மிகச்சிறந்தத் திருவிழாவாக நான் தேரோட்டத்தைத்தான் சொல்லுவேன். சிறுவயது முதலே தேரோட்டம் மனதில் ழப்பதிந்துபோனதை அறிய முடிகிறது. ன்மீகத்தைத் தாண்டி அந்தத் திருவிழாவின் மீதான பற்றை உணரமுடிகிறது. சின்ன வயதில் தேரோட்டத்தைக் காட்ட, அப்பா தோளில் தூக்கிவைத்துக்கொண்டு போனது இன்னும் நினைவிருக்கிறது. அப்பர்க்ளாப்டர் பள்ளியின் படிகளில் அண்ணாவும் அக்காவும் காத்திருப்பார்கள். அவர்களையும் கூட்டிக்கொண்டு தேரோட்டம் பார்க்கச் சென்றது ஒரு புகைப்படம் போல கண்முன் விரிகிறது.

வாழ்க்கையோட்டத்தில் மதுரைக்குப் போய் திருநெல்வேலியின் வாசனையே மறந்துபோனது. அப்பர்க்ளா·ப்டர் பள்ளியின் படிகளில் அண்ணனும் அக்காவும் காத்திருந்தது மட்டும்தான் தேரோட்ட நினைவுகளின் எச்சமாய் ஒட்டி இருந்தது. வாழ்க்கை மீண்டும் சுழல மதுரையிலிருந்து மீண்டும் நெல்லைக்கு. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பின் நெல்லையைக் காணும்போது நான் பிறந்து வளர்ந்த தெருவைத் தவிர வேறெதுவுமே நினைவுக்கு வரவில்லை. மெல்ல மெல்ல விளங்க ஆரம்பிக்கும் முப்பரிமாணப் படம் மாதிரி ஒன்றிரண்டு நினைவுகள் தலைதூக்க ஆரம்பித்த நேரம் நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் ஊரே விழாக்கோலம் பூண்டது. ஏகப்பட்ட கதைகளைப் பாட்டியும் அம்மாவும் தாத்தாவும் சொல்லி "இது கூட ஞாபகம் இல்லையா?" என்று கேட்டுக்கொண்டிருக்க , நான் தேரோட்டத்திற்குத் தயாரானேன்.

நினைவுக்கு வந்த பின்பு நான் பார்த்த முதல் தேரோட்டம் என்னை அத்தனை ஈர்க்கவில்லை. நல்ல பையனாக அம்மாவுடன் சென்று அசைந்து வரும் தேரை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். மீசை முளைக்கத் தொடங்கியிருக்கும்; முளைத்துவிட்ட பையன்கள் தேரை இழுக்காமல் ஓரத்தில் நின்றோ, ஏதேனும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்றோ பார்வையாளராக மட்டும் இருந்தால், வடம் இழுக்கும் கூட்டத்திலிருந்து செருப்பு வரும். அந்த பயம் உள்ளுக்குள் இருந்தாலும் ஜனக்கூட்டத்தின் உற்சாகத்தையும் வயசுப் பசங்களின் ரவாரத்தையும் அலங்காரம் பண்ணிக்கொண்ட வயசுப்பெண்களின் சிரிப்பொலியையும் இரசிக்கத் தவறவில்லை.

தெருவின் வழியெங்கும் இரு ஓரத்திலும் அங்கங்கு குவித்து வைத்து காராச்சேவு, ஜாங்கரி என விற்பனை. நீளமான மரக்கம்பின் உச்சியில் ஜால்ரா கைகளைத் தட்டிக்கொண்டே இருக்கும் பொம்மையும் அதைச் சுமந்து செல்பவன் கையில் கட்டிவிடும் வாட்சு ஜவ்வு மிட்டாயும் என்னை அதிகம் கவர்ந்தது, தேரோட்டத்தை விட. இப்போது யோசித்துப் பார்த்தால் தேரோட்டம் எனபது தனியாய் தேரோடுவது மட்டுமில்லை என்று புரிகிறது. எல்லாம் சேர்ந்தது.

இரண்டாம் தேரோட்டத்திற்கு முன்பு, அந்த ஒரு வருடத்தில் நண்பர்கள் சேர்ந்துவிட, புதுவிதமான தேரோட்டம் அறிமுகமாகியது. அதே தேர்தான். அதே திருவிழாதான். னால் அனுபவம் மட்டும் வித்தியாசம்.

காலையில் ஆறுமணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, தேருடனே நடந்து வந்து அது நிற்கும்போது நின்று, அசைந்து நகரும்போது கத்திக்கொண்டே வடம் இழுத்து, நீர்மோர், பானகரம் வாங்கிக்குடித்து, (மறுநாள் தொண்டை கட்டிக்கொள்ளும்) இரண்டு ஓரத்திலும் வரிசையாக நிற்கும் பெண்களைப் பார்த்து கமெண்ட் அடித்து, முரசறைந்துகொண்டே மைக்கில் 'எல்லோரும் வடத்தைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று அடி மூச்சிலிருந்து கத்திச் சொல்லும் வயசாளியைப் பரிகசித்து, அவ்வப்ப்போது பாராட்டி... முடியும்போது மதியமாயிருக்கும். யாராவது ஒரு நண்பன் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, படத்திற்கு ஓடி, சாயங்காலம் மீண்டும் வடம் பிடிப்போம்.

தேர் நிலையம் நெருங்கும்போது, ரெம்கேவி பக்கத்தில் வரும்போதே வயசுப் பசங்க காணாமல் போய்விடுவார்கள். அப்படிக் காணாமல் போகாத பயல்கள் ஒன்று வெளியூர்க்காரன்களாய் இருக்கவேண்டும், அல்லது சாது/அப்பிராணியாய் இருக்கவேண்டும். காலையிலிருந்து மாலைவரும் ட்டம்போடும் பயல்களை போலீஸார் குறித்து வைத்துக்கொண்டு, தேர் நிலையம் நெருங்கும்போது பெண்டு நிமித்துவிடுவார்கள் என்பது நடைமுறை.

சிலவருடங்களுக்கு முன்பு வரை தேர் நிலையம் சேர குறைந்தது ஒரு வாரமாவது குமாம். தேர் பெரிய தேராக இருக்குமாம். பதிமூன்று அடுக்குகள் கொண்டிருந்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பதிமூன்று அடுக்குகள் கொண்டதாய் இருந்தபோது நிலையம் சேர ஒரு மாதகாலம் கூட கியிருக்கிறதாம். அந்த ஒரு மாத காலமும் நெல்லை டவுண், ஜங்க்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மாலை மூன்று மணிக்கெல்லாம் முடிந்துவிடும். பையன்கள் வந்து தேர் இழுப்பார்கள் என்று நம்பிக்கை. இப்போதெல்லாம் ஆறு அல்லது ஏழு அடுக்குதான் வைக்கிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக ஒரே நாளில் நிலையம் சேர்த்து விடுகிறார்கள். போக்குவரத்து பாதிப்பு, தீவிரவாத/இனவாத குழுக்களின் அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பல வகைக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒரு மாத காலமாய் தேர் இழுத்த காலங்களில் தேர் எந்தக் கடையின்/வீட்டின் முன் நிற்கிறதோ அவர்கள் அன்றைய நாளுக்கான பூஜை/நெய்வேத்ய செலவுகளை ஏற்பார்கள். நெல்லையின் இரதவீதிகளில் பல இஸ்லாமியக் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகள் முன்பு நிற்க நேரும்போது அவர்களும் அதை ஏற்று மனமுவந்து செய்திருக்கிறார்கள். இன்னும் நெஞ்சில் ஈரம் உள்ள ஊர்களில் ஒன்றாய் நெல்லையை என்னால் உறுதியாக அடையாளம் காட்டமுடியும்.

இப்போதெல்லாம் தேர் ஒரே நாளில் நிலையம் சேர்ந்து விடுவதால் 'தேரை இழுத்து நடுத்தெருவுல விட்டுட்டீயளேடே' என்கிற கமெண்ட்களைக் கேட்க முடிவதில்லை. தேரோட்டச் சமயம் மட்டுமே எளிதாகக் கிடைக்கும் தேங்காய்மிட்டாய் என்கிற இனிப்பை அன்று மட்டும்தான் உண்ண முடிகிறது. குவித்துவைத்திருக்கும் ஜாங்கிரி, சேவுகளை ஒருநாள் மட்டும்தான் காண முடிகிறது. மாணவர்களுக்கு தேரோட்ட நாள் மட்டுமே விடுமுறை. மற்ற நாள்களில் வழக்கம்போல பள்ளி நடைபெறுகிறது. ஒரு வேளை ஒரே நாளில் நிலையம் சேராவிட்டால் (சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் தேரை நிலையம் சேர்ப்பதில்லை என நினைக்கிறேன்) என். எஸ். எஸ்., காவல்துறையினர் மற்றும் ரிசர்வ் படையினரை வைத்து நிலையம் சேர்த்துவிடுகிறார்கள்.

தேரோட்டத்தை லைவ்வாக உள்ளூர் கேபிள்கள் போட்டி போட்டு ஒளிபரப்புகின்றன. இந்த முறை பண்பலை வானொலியும் அதன் பங்குக்குத் தேரோட்டச் சிறப்புச் செய்திகளை ஒலிபரப்பிதயாகச் சொன்னார்கள். இத்தனையையும் மீறி, தேரோட்டம் காணும் மக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடிக்கொண்டே வருவதாகத்தான் தெரிகிறது.

nellaiyappar thEr (C) Haranprasanna
தேர்
--ஹரன்பிரசன்னா
நிலையம் சேர்ந்த பின்
தேர்வந்த பாதையில்
சிதறிக்கிடக்கின்றன
தொலைந்த செருப்புகள்

இராதை தேடிய கண்ணன்
புதுமாப்பிள்ளையின் பெருமூச்சு
யானையின் இராஜ நடை
மரக்கம்பின் நுனியில்
சவ்வு மிட்டாயோடு
கைதட்டிக்கொண்டிருந்த பொம்மை
எல்லாவற்றையும் அசைபோட்டுக்கொண்டு
கம்பீரமாய் நிலையத்தில் நின்று
இரவைக் கழிக்கிறது
தேர்
மறுநாளின் எடையிழத்தலை
எதிர்நோக்கி.



Monday, October 21, 2002

குற்றாலம்



நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. அது நகருவதற்கு எந்தவொரு பிரயத்தனமும் தேவையில்லை என்பதால் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஏதோ சில கணங்களில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகள் மனதில் ஆழப்பதிந்து எதிர்பாராத நேரத்தில் வெளிவந்து சொல்ல முடியாத ஏக்கத்தை விட்டுவிட்டுச் சென்றுவிடும்.

குற்றாலம்.

நெல்லையில் இளமைக்காலத்தைக் கழித்த/கழிக்கும் மனிதர்களின் மனதில் அப்படியரு அனுபவத்தை விட்டுசெல்லும் குற்றால அருவி. பேருந்திலிருந்து இறங்கும்போதே குளிர்காற்றும் சாரலும் உடலைத் தழுவ ரம்பிக்க, மனம் இன்னொரு தளத்தில் பாவத்தொடங்கும். முதல்நாள் பெய்த மழையின் காரணமாக வழியெங்கும் சகதியும் கழிவுகளுமாய் நீளும் சாலைகளில் கால் வைக்கும்போது உண்டாகும் அருவருப்பும் எதிரே எண்ணெயோடு வரும் மனிதன் அறியாமல் உரச, மேலாடையில்லா உடலில் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய்ப் பிசுக்கும், மதுபானக் கடைகளின் பயனால் உலவும் சாராயநெடியும் தரும் அயர்ச்சி, பொத்துக்கொண்டு விழும் அருவியைப் பார்க்கும்போது சட்டென மறையும். அருவி விழுவதைப் பார்த்துக்கொண்டே இருத்தல் கூட ஒரு சுகம்.

செண்பகாதேவி அருவி செல்லும் வழிக்கான மலை/காட்டுப் பாதையில் ஓயாமல் அருவி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதையும் மீறி என்ன பேசுகிறோம் என்ற உணர்வில்லாமல் எதையாவது பேசிக்கொண்டும், கையில் இருக்கும் கடலையைக் கொறித்துக்கொண்டும், குரங்குகளை வம்பிழுத்துக்கொண்டும், குளித்துவிட்டு ஈரத்துடன் எதிரே வரும் பெண்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டும் நண்பர்களுடன் நடக்க அந்த நினைவுகள் ஏகாந்தமாகிப் போகும்.

முகம் தெரியா மனிதர்கள் கூட சில தடங்களை விட்டுச் செல்வார்கள். குளிருக்கு இதமாய் சாயா விற்கும் சிறுவன், திடீரென மழை வலுக்க, சிதிலமடைந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கும்போது அங்கே சிவப்புத் துப்பட்டாவால் முக்காடிட்டு நின்றிருந்த பெண், தோளோடு தோளுரசி நடந்து மனதில் வெப்பத்தை விதைத்துவிட்டுச் சென்ற காதலர்கள் எனப் பல நினைவுகள் இன்னும் குற்றாலத்தின் காற்றில் மிச்சமிருக்கும்.

'சீசனே நல்லா இல்லியேல..', 'என்னா சீசன்.. டக்கர் போ', 'இந்த மாமா பயலுவோ குளிக்கவே விடமாட்டேங்காய்யா', 'போலீசு இல்லின்னா நாம குளிச்சா மாதிரிதான்', 'எலே.. மொலயப் பிடிக்கப் பாக்கியாலே.. அக்கா தங்கச்சி கூட பொறக்கலை?' என்பன போன்ற கமெண்ட்டுகளை எல்லா நாள்களிலும் கேட்கலாம். ஒவ்வொரு சீசனுக்கும் இந்த நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டேதானிருக்க வேண்டும். யாரோ இருவர் தோளுரசி நடந்துகொண்டிருக்க யாரோ சிலர் சூடாகிக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஏதோ ஒரு போலீஸ், குற்றம் செய்த ஏதோ ஒருவனை ஏசிக்கொண்டுதான் இருக்கவேண்டும். குற்றாலம் உள்ளவரை, அருவி கம்பீரமாக விழுந்துகொண்டிருக்கும் வரை அங்கே பத்திரப்படுத்தப்பட்ட சில நினைவுகள் அலைந்துகொண்டுதானிருக்கும்.

அருவியில் முதல்முறை குளிக்கப்புகு முன்பு உடலில் பரவும் ஒரு வித புல்லரிப்பும், ஏற்கனவே குளிக்கத்தொடங்கிவிட்ட நண்பன் மீது பரவும் கண நிமிட பொறாமையும், அருவியின் வேகத்தில் யாருடைய காலிலிருந்தோ கழன்று மிதந்துகொண்டிருக்கும் இரப்பர் செருப்பும் கவிதைக்கான படிமங்கள்.
(C)Desikan
குற்றால அருவி
---ஹரன் பிரசன்னா

அருவியில் நீரில்லாத நேரங்களில்
குற்றாலநாதர் எங்கு குளிப்பார் என்பதை விட
எனது கவலை
செண்பகாதேவிக்குச் செல்லும் வழியில்
வாழும் குரங்குகள்
எந்தக் கூடையிலிருந்து
பழம் பறிக்கும் என்பதே.

நீரில்லாத குற்றால மலையைக்
காண நேரும்போது
என்ன நினைக்கும்
சீசன் குளிரில்
விரைத்த குறியோடு
பெண்யோசனையில் திரிந்தகூட்டம்

ஏதோ ஒரு வேளையில்
எடுத்துவைத்த
ஞாபகக் கூழாங்கல்லை
திரும்ப அருவியில் எறியும்போது
அது சொல்லும் நன்றியை
உங்களுக்குச் சொல்கிறேன்
அருவிச் சத்தம் செவி அடைக்காதிருந்தால்

குளிக்கும்போது தோன்றி மறையும்
வண்ணப்பிரிகை மாதிரி
சிதறித் தெறிக்கும் எண்ணங்களை
அலம்பிக்கொண்டோடுகிறது அருவி
அது அறியாமல்.


(இங்குள்ள குற்றால அருவி வரைபடம் நண்பர் தேசிகன் வரைந்தது. அவரது வலைத்தளத்தில் இருந்து எடுத்தாள உதவிய அவருக்கு நன்றி)