குற்றாலம்
நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. அது நகருவதற்கு எந்தவொரு பிரயத்தனமும் தேவையில்லை என்பதால் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஏதோ சில கணங்களில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகள் மனதில் ஆழப்பதிந்து எதிர்பாராத நேரத்தில் வெளிவந்து சொல்ல முடியாத ஏக்கத்தை விட்டுவிட்டுச் சென்றுவிடும்.
குற்றாலம்.
நெல்லையில் இளமைக்காலத்தைக் கழித்த/கழிக்கும் மனிதர்களின் மனதில் அப்படியரு அனுபவத்தை விட்டுசெல்லும் குற்றால அருவி. பேருந்திலிருந்து இறங்கும்போதே குளிர்காற்றும் சாரலும் உடலைத் தழுவ ரம்பிக்க, மனம் இன்னொரு தளத்தில் பாவத்தொடங்கும். முதல்நாள் பெய்த மழையின் காரணமாக வழியெங்கும் சகதியும் கழிவுகளுமாய் நீளும் சாலைகளில் கால் வைக்கும்போது உண்டாகும் அருவருப்பும் எதிரே எண்ணெயோடு வரும் மனிதன் அறியாமல் உரச, மேலாடையில்லா உடலில் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய்ப் பிசுக்கும், மதுபானக் கடைகளின் பயனால் உலவும் சாராயநெடியும் தரும் அயர்ச்சி, பொத்துக்கொண்டு விழும் அருவியைப் பார்க்கும்போது சட்டென மறையும். அருவி விழுவதைப் பார்த்துக்கொண்டே இருத்தல் கூட ஒரு சுகம்.
செண்பகாதேவி அருவி செல்லும் வழிக்கான மலை/காட்டுப் பாதையில் ஓயாமல் அருவி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதையும் மீறி என்ன பேசுகிறோம் என்ற உணர்வில்லாமல் எதையாவது பேசிக்கொண்டும், கையில் இருக்கும் கடலையைக் கொறித்துக்கொண்டும், குரங்குகளை வம்பிழுத்துக்கொண்டும், குளித்துவிட்டு ஈரத்துடன் எதிரே வரும் பெண்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டும் நண்பர்களுடன் நடக்க அந்த நினைவுகள் ஏகாந்தமாகிப் போகும்.
முகம் தெரியா மனிதர்கள் கூட சில தடங்களை விட்டுச் செல்வார்கள். குளிருக்கு இதமாய் சாயா விற்கும் சிறுவன், திடீரென மழை வலுக்க, சிதிலமடைந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கும்போது அங்கே சிவப்புத் துப்பட்டாவால் முக்காடிட்டு நின்றிருந்த பெண், தோளோடு தோளுரசி நடந்து மனதில் வெப்பத்தை விதைத்துவிட்டுச் சென்ற காதலர்கள் எனப் பல நினைவுகள் இன்னும் குற்றாலத்தின் காற்றில் மிச்சமிருக்கும்.
'சீசனே நல்லா இல்லியேல..', 'என்னா சீசன்.. டக்கர் போ', 'இந்த மாமா பயலுவோ குளிக்கவே விடமாட்டேங்காய்யா', 'போலீசு இல்லின்னா நாம குளிச்சா மாதிரிதான்', 'எலே.. மொலயப் பிடிக்கப் பாக்கியாலே.. அக்கா தங்கச்சி கூட பொறக்கலை?' என்பன போன்ற கமெண்ட்டுகளை எல்லா நாள்களிலும் கேட்கலாம். ஒவ்வொரு சீசனுக்கும் இந்த நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டேதானிருக்க வேண்டும். யாரோ இருவர் தோளுரசி நடந்துகொண்டிருக்க யாரோ சிலர் சூடாகிக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஏதோ ஒரு போலீஸ், குற்றம் செய்த ஏதோ ஒருவனை ஏசிக்கொண்டுதான் இருக்கவேண்டும். குற்றாலம் உள்ளவரை, அருவி கம்பீரமாக விழுந்துகொண்டிருக்கும் வரை அங்கே பத்திரப்படுத்தப்பட்ட சில நினைவுகள் அலைந்துகொண்டுதானிருக்கும்.
அருவியில் முதல்முறை குளிக்கப்புகு முன்பு உடலில் பரவும் ஒரு வித புல்லரிப்பும், ஏற்கனவே குளிக்கத்தொடங்கிவிட்ட நண்பன் மீது பரவும் கண நிமிட பொறாமையும், அருவியின் வேகத்தில் யாருடைய காலிலிருந்தோ கழன்று மிதந்துகொண்டிருக்கும் இரப்பர் செருப்பும் கவிதைக்கான படிமங்கள்.
குற்றால அருவி
---ஹரன் பிரசன்னா
அருவியில் நீரில்லாத நேரங்களில்
குற்றாலநாதர் எங்கு குளிப்பார் என்பதை விட
எனது கவலை
செண்பகாதேவிக்குச் செல்லும் வழியில்
வாழும் குரங்குகள்
எந்தக் கூடையிலிருந்து
பழம் பறிக்கும் என்பதே.
நீரில்லாத குற்றால மலையைக்
காண நேரும்போது
என்ன நினைக்கும்
சீசன் குளிரில்
விரைத்த குறியோடு
பெண்யோசனையில் திரிந்தகூட்டம்
ஏதோ ஒரு வேளையில்
எடுத்துவைத்த
ஞாபகக் கூழாங்கல்லை
திரும்ப அருவியில் எறியும்போது
அது சொல்லும் நன்றியை
உங்களுக்குச் சொல்கிறேன்
அருவிச் சத்தம் செவி அடைக்காதிருந்தால்
குளிக்கும்போது தோன்றி மறையும்
வண்ணப்பிரிகை மாதிரி
சிதறித் தெறிக்கும் எண்ணங்களை
அலம்பிக்கொண்டோடுகிறது அருவி
அது அறியாமல்.
(இங்குள்ள குற்றால அருவி வரைபடம் நண்பர் தேசிகன் வரைந்தது. அவரது வலைத்தளத்தில் இருந்து எடுத்தாள உதவிய அவருக்கு நன்றி)