அம்மா மண்டபம் - சிறுகதை
நவம்பர் பத்து.
அம்மா மண்டபத்திற்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும். அடிக்கடி ஸ்ரீரங்கம் வந்து இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ இருக்கும்போது மனது கிடந்து அடித்துக்கொள்ளும். ஆனாலும் எதோ ஒன்று என்னை அங்கே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். என்னவென்று தெரியவில்லை. இன்று எல்லா நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு வந்துவிட்டேன். வெளியில் இருந்து பார்த்தபோது ஒரு சில மாற்றங்களைத்தவிர அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. கல்லில் செதுக்கப்பட்ட அனுமார் சிலை இருந்தது. அதை ஒட்டிக் கடை. விபூதி, பூணூல், சில சாமி படங்கள் என வரிசையாய்ப் பரப்பப்பட்ட நடைபாதையைத் தாண்டி ஒரு பூக்கடை. அதில் நிறைய மாலைகள் இருந்தன. சில மாலைகள் கடவுளூக்குச் சார்த்தப்படலாம். சில இறந்தவர்களின் உடலுக்குச் சார்த்தப்படலாம். அப்படி நினைத்ததுமே ஒரு அருவருப்பு என் மனதில் ஒட்டிக்கொண்டது. நான் வெளியில் நின்று பார்ப்பதை மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் பார்ப்பது போலத் தோன்றியது. என் பிரமையோ? மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே செல்ல எத்தனித்தேன்.
ஆற்றில் இருந்து குளித்துவிட்டு வெளியே வருபவர்களின் பாதங்களில் இருந்த மணற்துகள்கள் அந்த கல்மண்டபத்தின் தரை மீது பரவி இருந்தது. பொதுவாக மண்டபத்தின் உள்ளே செல்லும்போது செருப்பு அணிந்து செல்வது இல்லை. அந்தத் துகள்கள் காலில் பட்டதும் என் மனம் ஏதோ அருவருப்பாய் உணர்ந்தது. ஒரு வித மயிர்க்கூச்சம். இதே கூச்சம் பழைய கோவில்களின் உள்ளே செல்லும் போதும் எனக்கு ஏற்படும். என் காலில் ஒட்டியிருந்ததை நீக்கும்பொருட்டு என்னையும் அறியாமல் காலை தட்டிக்கொண்டே நடந்தேன். அவை மனதில் ஒட்டிக்கொண்ட நினைவுகள் போல விழாமல் இருந்தன. அவற்றைக் கடந்து ஆற்றின் மணற்பகுதிக்கு வந்தேன். மணலில் கால் பட்டதும் என்னால் என்னவென்று சரியாய்ப் புரிந்துகொள்ளமுடியாத ஒருவித உணர்ச்சி மேலோங்கியது. சுற்றிலும் ஆங்காங்கே சவரம் செய்யும் கடைகள் என்பது போல வெறும் நாற்காலிகள் சில இருந்தன. ஒரு சில நாற்காலிகளில் சிலர் சவரம் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். எதிரே சிறிது தள்ளி சிரார்த்தம் செய்யப்பட்டு இலையில் வைக்கப்பட்ட பிண்டங்கள் சிதறி இருந்தன. சிறிது சிறிதாய் மணலால் செய்யப்ப்பட்ட மட்பாண்டங்கள் பரப்பிக்கிடந்தன. அப்போதெல்லாம் இதை எடுத்துதான் விளையாடுவோம். வீட்டில் அதைத் தொடுவதே பாவம் என்று அலறுவார்கள். இப்போதெல்லாம் யாரும் அதை எடுத்து விளையாடுவதில்லையா என்ன?
காவேரியின் நீரோட்டம் என் கண்களில் தெரிய ஆரம்பித்தது. கரையைத் தொட்டபடி செல்லும் அந்த நீரோட்டம் பார்த்த போது நான் எதையோ இழந்தது போல இருந்தது. எதை இழந்தேன். தெரியவில்லை. ஆனாலும் மனதில் சோகத்தின் தடம் அழுத்தமானதாக இருந்தது. அவற்றை ஒதுக்க முடியவில்லை. எந்தவிதக் கவலையில்லாமல் கள்ளமற்றச் சிரிப்புடன் குழந்தைகள் கரையோரமாய்க் குளித்துக்கொண்டிருந்தார்கள். எப்போது தொலைத்தேன் இந்த கள்ளமற்றச் சிரிப்பை? கல்லால் ஆன படிகளில் கால் வைத்தேன். அதன் குளுமை உச்சியைத் தாக்கியது. அடுத்தடுத்த படிகளில் கால் வைத்து நீரில் இறங்கினேன். நீரோட்டம் அதிகம் இல்லை. ஆனாலும் காவேரியில் கால் வைத்திருக்கிறேன் என்ற எண்ணமே எனக்கு அளவில்லாத சந்தோஷம் தந்தது. என்ன அது நினைவு? அந்த சந்தோஷத்தை முழுமையாக உணரமுடியாமல்? இப்போது தெரியவில்லை என்று பொய் சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. இப்போதென்றில்லை. எப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் என்ற பெயர் கேட்கிறேனோ எப்போதெல்லாம் காவேரியின் நினைவு மனதில் வருகிறதோ அப்போதெல்லாம் வெளியில் சொல்லமுடியாத அந்த கழிவிரக்கம் என்னைத் தொற்றிக்கொள்ளும். நீரில் இரண்டு கால்களும் படுமாறு அந்தக் கற்படிகளில் அமர்ந்துகொண்டேன்.
எப்படி நடந்தது அது? இன்னும் விடைதெரியாத கேள்விதான் அது. நட்பில் ஆரம்பித்த அந்தப் புள்ளி என் வாழ்க்கையையே துரத்தும் தவறில் முடிந்தது எப்படி? எனக்குள் இருந்த மிருகம் என்னை மீறி வெளி வந்தது எப்படி? ஒருவேளை அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காதத்தான் எனது அன்றைய மற்ற வேஷங்களோ? இப்போதும் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. அதனால் தான் வேறேதோதோ காரணங்களை நானாகக் கற்பித்துக்கொண்டு அம்மாமண்டபம் வர தவிர்த்தேனோ? இருக்கலாம். நீரலைகளின் திசையில் என் நினைவலைகளும் நீந்தத் தொடங்கியது. நான் நானாகவும் வேறாகவும் இருப்பது போல ஒரு உணர்வு என்னைத் தொற்றிக்கொள்ள , நான் அமைதியாய் அந்த வேறைப் பார்க்கத் தொடங்கினேன்.
எத்தனையோ நண்பர்கள் இருந்தும் எனது அலைவரிசையில் எனக்கென என்னுடன் வாதிட என் எண்ணங்களைப் புரிந்துகொள்ள எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள, ஒரு பெண் துணைக்கு நான் எங்கிக்கொண்டிருந்த நாள்கள் அவை எனச் சொல்லலாம். மின்னல் போல் வந்தாள் எனச் சொல்லலாமா? சொல்லலாம். சந்தேகமே இல்லை. அப்படி ஒரு ஈர்ப்பு. எதைச்சொன்னாலும் அதிரடியாய் ஒரு கருத்து. ஒரு பெண்ணால் அப்படிச் சிந்திக்கமுடியுமா என்ற கேள்வியிலிருந்தே நான் வெளிவந்த பாடில்லை. ஏதோ என்னைப்போல் யாரும் இங்கில்லை என்னும் என் எண்ணத்தை உடைக்கும் முகமாவே அவள் வந்தது போல எனக்குத் தோன்றும் அப்போது.
"என்ன சார்.. கவிதைலாம் எழுதுவீங்களாமே? எங்க ஒரு கவிதை சொல்லுங்க கேட்கலாம்? "
யாரிவள் என்று யோசிக்கும் முன்னரே அவள் தொடர்ந்தாள்.
"யாருன்னு பார்க்றீங்களா? அது எதுக்கு உங்களுக்கு.. ஒரு கவிதை சொல்லுங்க.. அது நல்லா இருந்தா நான் உங்க ரசிகைன்னு னைச்சிக்கோங்க.. நல்லா இல்லைனா ஏதோ வழியில பார்த்தமாதிரி நினைச்சிக்கோங்க..."
அழகாய் இருந்தாள். ஆனால் அதிகம் பேசுகிறாள். நான் கவிதை எழுதுவேனா என்பது எனக்கே இன்னும் சரியாக பிடிபடவில்லை. ஒருவேளை நான் இரவில் அம்மாமண்டபத்தில் அமர்ந்து எழுதுவதைப் பார்த்திருப்பாளோ? நான் பதில் சொல்லாமலேயே யோசித்துக்கொண்டு இருந்ததைப் பற்றி அவளும் யோசித்திருக்க வேண்டும்.
"என் பேரு ஸ்ரீமதி. எல்லாரும் சுருக்கமா ஸ்ரீன்னு கூப்பிடுவாங்க. எனக்கு இந்த கவிதை கதைலல்லாம் கொஞ்சம் ஆர்வம் உண்டு. உங்களப்பத்தி உங்க மாமா சொன்னாங்க. உங்க மாமாவும் எங்க அப்பாவும் ரொம்ப ·பிரண்ட்ஸ். இந்த வழியாப் போனேன். உங்க வீடு கண்ணுல பட்டது. சரி பார்த்து ஒரு கவிதையைக் கேட்டுட்டுப் பாராட்டிட்டுப் போனா கொஞ்சம் சந்தோஷப்படுவீங்களேன்னு வந்தேன்"
மூச்சு விடாமல் அவள் பேசுவதே ஒரு கவிதை மாதிரி இருந்தது. கண்ணும் பேசுவது போல உணர்ந்தேன். என் மனதின் கடிவாளங்களைக் கட்டிப்போட்டேன். பதில் சொன்னேன்.
"நான் என் கவிதைகளை யாருக்கும் சொல்வதில்லை. அவை எனக்கானவை. என் மனதின் படர்க்கை நிலை.படித்துவிட்டு நீங்கள் புகழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனக்கு. தவிர என் மனதின் உறுத்தல்களைக் கவிதையாக்கிக் கொச்சைப்படுத்தி விட்டதாய் நீங்கள் அலறக்கூடும். அதைத்தவிரவும் என் கவிதைகளை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் என்னை கவரவில்லை. அதனால்..."
"நீங்க பேசுறதே தமிழ் தானான்னு சந்தேகமா இருக்குது.. இதுல கவிதை எங்க புரியப்போகுது. நமக்கு வர்றதெல்லாம் காதல், இயற்கை பற்றிய கவிதைகள்தான். அதை விடுங்க. எங்க காலேஜ்ல ஒரு கவிதைப் போட்டி இருக்குது. எனக்கு ஒரு கவிதை எழுதிக்கொடுங்க. ப்ளீஸ்.."
நான் சொன்ன பதில் அவளின் முகத்தில் அறைந்திருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு அவமானமாக இருந்தது. என்ன இவள் இத்தனை சுலபமாய் ஒரு கவிதை கேட்கிறாள். எனக்குள் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. என்னால் கோபத்தைஅதிகம் வெளிக்காட்ட முடியவில்லை. யாரென்றே தெரியவில்லை. முதலில் மாமாவிடம் சொல்லிவைக்கவேண்டும் என் புகழ் அதிகம் பாட வேண்டாம் என்று.
"எனக்கு இயற்கை பற்றியெல்லாம் கவிதை வராது. என் கவிதை கோபம் பற்றியது. தனி மனித உணர்வுகள் பற்றியது. அதில் தீப்பொறி இருக்கும். பனித்துளி இருக்காது. தவிரவும் உன் செய்கை உன்பால் ஒரு இனம் தெரியாத கோபத்தை ஏற்படுத்துகிறது. எப்படிப் பேசவேண்டும் என்ற முறைதெரியாதா உனக்கு?"
"என்னவோ ரொம்ப திட்டுறீங்களே? என் கேரக்டர் இதுதான். உங்களுக்காக நான் மாத்திக்கமுடியுமா? முறைனு சொல்றீங்க.. முதல் தடவையே உனக்குன்னு ஒருமையில பேசுறீங்களே..? நான் தப்பா பேசுனா மன்னிச்சிடுங்க. ஏதோ ஒரு ஆர்வத்துல அப்படி ஆயிப்போச்சு. எனக்கு பனித்துளின்ற தலைப்புல ஒரு கவிதை வேணும். ப்ளீஸ்.. நாளைக்கு வர்றேன். ... வரட்டுமா கோபக்காரக் கவிஞரே..."
என் பதிலுக்காய் காத்திராமால் வந்த வேகத்தில் சென்று விட்டாள். என்ன பெண் இவள்? ஏதோ ஒரு இனம் தெரியாத கோபமும் அதற்குள்ளாய் ஒரு சுகமும் இருப்பது போல இருந்தது. எனக்கு பெண்கள் அதிகம் பழக்கம் இல்லாத காரணத்தினால் இப்படி இருக்குமோ? அல்லது அவளது அழகு அடித்துபோடுகிறதா? மிகத்தீர்மானமாய் சொல்லிக்கொண்டேன். என்னை அவள் கவரவே இல்லை என்று.
நீரின் அலைகள் காலில் மோதி என் சுய இருப்பை உணர்த்திகொண்டிருந்தன. எத்தனை வேகமாய் மறுத்தேனோ அத்தனை வேகமாய் அவளுக்காய் ஒரு கவிதை எழுதித்தந்ததும் அவள் அதை பாராட்டியதும் நினைவுக்கு வந்தது. மெல்ல மெல்ல எங்கள் நட்பு வளரத்தொடங்கியது. எத்தனை முறை இதே இடத்தில் அமர்ந்து பேசியிருப்போம். உண்மையில் நான் நினைத்த அளவுக்கு அவள் முட்டாளாய் இருந்திருக்கவில்லை எனபது எனக்குப் புரியத் தொடங்கியது. ("நீங்க எப்பவும் அடுத்தவங்கலை அண்டர் எஸ்டிமேட் செய்றீங்க"என்பாள்) அவளுக்கும் கவிதை பற்றிய அறிவு இருந்ததாகவே பட்டது. எத்தனை அழகான விமர்சனங்கள். எப்படிப்பட்ட விவாதங்கள்.
எல்லாம் பொய்யோ? ஒரு பலகீனமான சந்தர்ப்பத்திற்கான தேடுதலின் முன்னேற்பாடுகளோ? எப்படி நடந்தது என்னை மீறி.. எத்தனை முறை சொன்னேன்.. வெறும் நட்பு என்று.. எல்லாம் என் மிருகத்தனத்தை மறைக்கும் பொருட்டேவா? என் உள் நெஞ்சில் ஒரு சிறிய தீப்பொறியாய் இருந்துகொண்டே இருந்தாளோ? நான் நட்பு மட்டும் தான் என்று சொன்னபோதெல்லாம் அவளும் அது மட்டும் தான் என்று சொன்னதெல்லாம் அந்த ஒரு மிடத்தில் மறந்தது எப்படி? கேவலமாய் இருந்தது. அந்த சந்திரகிரகண இரவில் எதன்பொருட்டு இந்த அம்மா மண்டபத்திற்கு வந்தாள்? அதுவும் அந்த சந்திரகிரகணகத்தில்... நிலாவைக் கூட என்னால் பார்க்கமுடிவதில்லை. குறுகுறுத்துப் போகிறேன்.
ஸ்ரீரங்கத்தின் கோபுரங்கள் விண்ணைத் தொட்டுகொண்டு நின்றன. அதைப் பார்க்கவே மிரட்சியாக இருந்தது. ஏனப்படி? பயத்தைஎல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்துகொண்டே இருந்தேன். எத்தனை உயரமாய் எத்தனை கம்பீரமாய் தன் இருப்பில் ஒரு மமதையுமாய் இருக்கிறது. என் எண்ணங்கள் இப்படி இருக்கும்போதே திடீரென அதில் ஒரு ஜோடி கண்கள் தோன்றி மறைவது போல இருந்தது. எனக்குள் பலமாய் அதிர்வுகள். யாருடைய கண்கள் அவை? எங்கோ பழக்கப்பட்ட கண்கள். அதற்கு மேலும் அந்த கோபுங்களைக் காணும் சக்தி இல்லை என் நெஞ்சில்.. ஆனால்.. யாருடைய கண்கள் அவை? ஏன் தோன்றி மறைகின்றன? எல்லாம் வீணே என் குழப்பங்களோ? மனதை ஒருமுகப்படுத்தி மீண்டும் பார்த்தபோது கோபுரம் மட்டுமே இருந்தது.
கண்களை கோபுரத்திலிருந்து காவேரி நீரின் பால் திருப்பினேன். எந்தவித சலனமுமில்லை. ஏன் என் வாழ்க்கை இப்படி இல்லாமல் போயிற்று. நிம்மதியில்லாமல் ஏதோ ஒன்று எப்போதும் என்னை உற்று நோக்குவதாய் என் பின்னே தொடருவதாய்.. எனிப்படி? அந்த நிமிடங்கள் என் வாழ்வில் கழாதிருந்திருக்கலாம். அதற்குப் பின்தான் நான் எத்தனை கோழை என்றும் எத்தனை மிருகம் என்றும் எனக்குத் தெரிந்தது.
நான் உன்னைத் தொட்டபோதே என்னை கோபமாய் விலக்கி இருக்கவேண்டும். ஏன் அமைதியாய் இருந்தாய். உனக்குள்ளேயும் வேறேதேனும் எண்ணங்கள் இருந்ததோ? ஆனால் எல்லா முறையும் காதல் இல்லை என்றுதானே சொன்னாய். பின் எப்படி அந்த நேரத்தில் அமைதியாய் இருந்தாய். எனக்குள் எப்படி அந்த தைரியம் வந்தது என்பதும் எனக்குப் புரியவில்லை.
அம்மாமண்டபத்தின் படிக்கட்டுகளில் அந்த சந்திரகிரகணத்தில் நாமிருந்த அந்த நெருப்பு நிமிஷங்கள் என் வாழ்க்கையின் மற்ற எல்லா மோசமான நிமிஷங்களையும் விட மோசமானவை. உன்னை விலகும்போது எனக்குள் குற்ற உணர்வின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது. உன் கண்ணைப் பார்க்கக்கூட முடியாத கோழையாய், எழுதிய கவிதைகளைக் கூட அப்படியே இந்தப் படிகளில் விட்டுவிட்டு நான் எழுந்துசென்றபோது உன் கண்கள் என் முதுகையே வெறிப்பதை அறிந்துதான் இருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கத் திடமில்லை என் நெஞ்சில்.
ஸ்ரீரங்கத்தின் கோபுரத்தில் தெரிந்த கண்கள் உன் கண்களோ? ஆமாம். சந்தேகமே இல்லை. அவை உன் கண்களேதான். அந்த நினைப்பே எனக்கு சொல்லவல்லாத பயத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. நீ இன்னும் எங்கோ இருந்து என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாயோ? இருக்காது. அப்படி ஒரு எண்ணத்தை நான் யோசிக்கும் நிலையில் கூட இல்லை. என்னால் வந்து உன்னைக் காண முடியாது. மனதளவில் எத்தனை கோழை நான் என்பது எனக்கு மட்டுமே தெரியும். மீண்டும் இதுபோல் கோபுரத்தில் கண்ட கண்களை நேரில் காண முடியாது. இனியும் மண்டபத்தின் படிகளில் இருப்பது சாத்தியமில்லதாகப் பட்டது எனக்கு. கால்களை நீரில் இருந்து இழுத்துக்கொண்டேன். ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை. படிகளை ஒவ்வொன்றாய்க் கடந்து மணற்பரப்பு வரும்போது என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தக் கற்படிகளை மீண்டும் காணவேண்டும் போல தோன்றியது. ஆனாலும் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே மண்டபத்தில் இருந்து வெளியில் வந்தேன். இனி இம்மண்டபத்திற்கு வருவதில்லை என்று தீர்மானமாய் நினைத்துக்கொண்டேன்.
நவம்பர் 11
எத்தனை நிகழ்வுகள். நடந்ததெல்லாம் இந்த அம்மா மண்டபம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும். துள்ளித் திரிந்த காலங்கள் போய் விட்டது. எதையும் எடக்காய் கேள்வி கேட்கும் பருவங்கள் மறைந்து நாளாகிவிட்டது. ஜனனி வந்தபின்னே எல்லாம் அவளாய் மாறியாகிவிட்டது. வேறு எதைப்பற்றியும் நினைப்பு இல்லை.
அம்மாமண்டபத்தின் உள்ளே செல்லும்போது பழைய நினைவுகள் வந்து நெஞ்சில் மோதுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்ததிரத்தின் தவறான திசைகளில் நான் நடந்த நாள்கள் அவை. கவிதை என்றுதானே தொடங்கியது. பின் எப்படி அது என்னை இழப்பதில் முடிந்தது என்பது இன்னும் பிடிபட்டபாடில்லை. என்னை அறியாமல் என் மனதின் ஆழத்தில் காமம் அப்பிக்கிடந்ததோ?
எப்படியும் அதற்குப்பின்னும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு நாள் திடீரென வந்து என்னைக் கூட்டிச்செல்வாய் என்று. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவே இல்லை. நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடந்தபோதுதான் உண்மை வாழ்க்கை வேறு கற்பனை வாழ்க்கை வேறு என்பது புரியத்தொடங்கியது.
அந்தச் சந்திரகிரகணம் என் வாழ்க்கையையே இருட்டாக்கும் என்பது நான் அறிந்திராத ஒன்று. முதலில் தொட்டபோதே உன்னை முழுவதுமாய் புறக்கத்திருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல் உருகியது தவறு. என் மனத்திற்குள்ளே எங்கோ ஒரு மூலையில் இதற்கான ஒரு காலகட்டத்திற்காக ஏங்கி இருந்திருப்பேனோ? கவிதை கதை என்ற காரணம் காட்டி உன்னைச் சந்திக்க வந்ததெல்லாம் சாக்கா? என்னை நானே ஏமாற்றிக்கொள்ள எத்தனித்ததின் வெளிப்பாடுகளா? எல்லாமே அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானா?
இன்னும் கூட நீ சொன்ன அந்த பனித்துளி கவிதை என்னுள் இருக்கிறது.
சற்று முன் நான் உன்னை முத்தமிட்டபோது
பார்த்துவிட்டப் புற்களை
யாரிடமும் சொல்லக்கூடாதென மிரட்டியிருக்கிறேன்
உண்மையில் பயந்துவிட்டன அவை
ஐயமெனில் நாளைக் காலை சென்று பார்
அவற்றின் உடலெங்கும் வேர்த்திருக்கும்
எத்தனைச் சந்தோஷமாய் இருந்தது எனக்கு. இது எனக்காக எழுதப்பட்டக்கவிதை. இன்னும் சொல்லப்போனால் நீ முதன்முதலாய் இயற்கை பற்றி எழுதிய கவிதையும் கூட. எத்தனைச் சந்தோஷமான நாள்கள் அவை. எத்தனை விஷயங்கள் பற்றி பேசியிருப்போம். எல்லாவற்றிலும் ஒரு தீர்மானமான எண்ணம் உனக்கு. ரொம்பப் பெருமையாக இருக்கும் உன்னைப் பார்க்கும்போது. உன்னைப்பற்றி நினைக்கும்போது. உன்னைப் பற்றிப் பேசும்போது.
அப்படி ஒரு பொழுதை நினைத்துதான் அந்தச் சந்திரகிரகண இரவில் அம்மா மண்டபம் வந்ததும். அதற்குபின் நடந்தவைகளுக்கு யார் பொறுப்பு என்று யோசிப்பது முட்டாள்தனம். ஆனால் நீ போன விதம் இன்னும் என் நெஞ்சில் புகைந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு குற்றவாளியாய் உன்னை நினைத்துகொண்டிருக்கலாம். உனக்கும் தெரியும் அதில் எனக்கும் பொறுப்பு உண்டென. அதற்குப் பின் என்னைப் ஒருமுறை ஒரே ஒரு முறையாவது பார்த்துவிட்டுச் சென்று இருக்கலாம். உனக்குத் தெரியும் என் கண்கள் உன் முதுகை வெறித்துக்கொண்டிருக்கின்றன என்று. எழுந்து சென்ற விதம் நீ செய்யவே முடியாத தவறொன்றை நான் செய்யவைத்துவிட்டதாகச் சொல்ல முனைவது போல இருந்ததே. எனக்குள்ளாய் ஒரு சந்தேகம். ஜனனி பிறந்த மாதிரி, உண்மையிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றா அல்லது அந்த நிமிடத்திற்காகத்தான் காத்திருந்தாயா? இதே சந்தேகம் எனக்குள்ளுளே என்னை நோக்கியும் இருப்பதை அறிகிறேன்.
உன்னைத் தேடிபிடித்து எனக்கு வாழ்க்கை தரவேண்டும் என்று போராடியிருக்க முடியும். உன்னைத் தாலி கட்ட வைத்திருக்க முடியும். ஆனால் அதில் இஷ்டமில்லை . நீ என்னை எச்சில் படுத்திவிட்டாய்; அதனால் நான் உனக்குத்தான் என்று வாழ்க்கையை உன் காலடியில் சமர்ப்பிக்கும் முட்டாள்தனம் வேண்டாம் உன் நினைவுகளைத் துரத்திவிட்டு வாழ முடியும் என்னால்.
எத்தனை அழகான கணவன். பண்பு தெரிந்தவன். அவனிடம் நான் ஒன்றும் சொல்லாமல் மறைத்துதான் வாழ்கிறேன். கடந்த காலங்களில் செய்த தவறைச் சொன்னால் கூட சிரித்துத் தலையை வருடம் குணம் உண்டு. ஆனால் வாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் அவனையும் உழல விடும் எண்ணம் எனக்கில்லை. இந்த நினைவுகள் என்னோடு போகட்டும். அந்த நிமிடத்தின் கரங்கள் என்னை பிடித்துகொண்டிருப்பதோடு போகட்டும். நான் செய்த தவறை விட இன்னும் இது பற்றி ஒரு வார்த்தைக் கூட அவனிடம் சொல்லாதது இன்னும் அதிகமாய் என் மனதை நெருடுகிறதுதான். இருந்தாலும் சொல்லும் தைரியம் எனக்கில்லை.
அம்மா மண்டபத்தின் அந்த கற்படிக்கட்டுக்களைக்காணும் போது உள்ளே அவமானமாய் இருந்தது. என் கொதிப்பை யாரிடமும் சொல்லமுடியாது. சில சமயம் இந்த நதியில் வந்து நிற்கும்போது எல்லாம் ஞாபகமும் வந்து மீண்டும் எல்லாமே இங்கேயே கரைந்துவிட்டது போல ஒரு உணர்வு வரும். அதற்காகத்தான் இன்றும் வந்தது.
ஜனனி என் கைகளை இறுகப் பற்றியிருந்தாள். அவளைப் பற்றி நினைக்கும்போதே எல்லா சோகங்களையும் மீறி ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த சந்தோஷம் தான் என்னை இன்னும் வாழச் செய்துகொண்டிருக்கிறது.
"அம்மா வாம்மா.. அப்பா ஆத்துல காத்துண்டு இருப்பார். வாம்மா போகலாம்.."
மழலையில் அவள் கொஞ்சல் என்னை ஆற்றுப்படுத்துவது போல உணர்ந்தேன். அவளைக் கூட்டிக்கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தேன். இனியாவது இந்த அம்மா மண்டபத்தின் படிக்கட்டுகள் உட்பட எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று மிகத்தீர்மானமாய் நினைத்துக்கொண்டேன். ஜனனி போதும் எனக்கு. தேவையில்லாத நினைவுகள் வேண்டாம்.
நவம்பர் 12.
ஜனனியைத் தூக்கிக்கொண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நதிக்கு வந்தது சந்தோஷமாய் இருந்தது. மனதில் இருக்கும் சோகங்களும் துக்கங்களும் ஜனனியைத் தூக்கித் தோளில் வைத்துக்கொள்ளும்போது மறந்து விடுகிறது. அப்பா அப்பா என்று அவள் மழலையில் அழைக்கும்போது மற்ற எதுவும் தேவை இல்லை என்று தோன்றுகிறது.
அம்மா மண்டபத்தின் படிகளில் அமர்ந்து காவேரியைக் காணும்போது ஏதோ ஒரு சுகம் வரும். நான் விளையாடிய இடங்கள் எல்லாம் காணும்போது எனக்குள் சந்தோஷமா துக்கமா என்று இனம்புரியாத அனுபவம் பரவும். கல்யாணம் செய்துகொண்டு ஸ்ரீயைக் கூட்டிக்கொண்டு முதன்முதலாய் இங்கேதான் வந்தேன். என்னென்னவோ சொல்லிக்கொண்டு வந்தேன். அவள் எதையும் கவனிக்காதது போலத்தான் இருந்தது. திடீரென கண்ணில் நீர் கோர்ப்பதைக் கூடப் பார்த்தேன். நான் வற்புறுத்திக்கேட்ட போது பழைய நினைவுகள் என்று சொன்னாள்.
நான் சந்தோஷமாக இருப்பதாகத்தான் நினைத்துக்கொள்வேன். ஆனால் ஸ்ரீயை நினைக்கும்போது ஒரு சில சமயம் பயமாய் இருக்கும். ஒரு சில சமயம் பாவமாய் இருக்கும். உண்மையில் அவள் அழகில் மயங்கித்தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னேன். நிச்சயிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழித்துதான் திருமணம் நடந்தது. நிச்சயித்தின் போது அவள் முகத்தில் இருந்த அந்த ஒரு கபடமற்ற தன்மை திருமணத்தின் போது இருந்ததாகத் தெரியவில்லை.
என்ன இருந்தாலும் என்னிடம் சொல் என்று எத்தனை முறை வற்புறுத்தி இருப்பேன். ஒன்றும் சொன்னதில்லை. எப்போதும் போல ஒரு சிரிப்பு. அப்படிக் கேட்ட நாள்களில் மிகுந்த சந்தோஷமாய் இருப்பது போலக் காட்டிக்கொள்வாள். அது அதிகம் செயற்கைத்தன்மையுடன் கூடியதாய் இருக்கும். என்ன இருக்கிறது அவள் மனதில்? தெரியவில்லை.
எங்களுக்குள்ளே ஏதோ ஒரு இடைவெளி இருப்பது போலத் தோன்றும். ஏதோ ஒரு மெல்லிய கோடு எப்போதும் பிரிப்பதாய்த் தோன்றும். எல்லாம் பிரமை என்றும் தோன்றும். ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று எல்லாரும் சொன்னபோது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஜனனி வந்த பின்பு அவள் உலகமே ஜனனி என ஆகிப்போனதோ? எனக்கென அவள் மனதில் என்ன இடம் கொடுத்திருக்கிறாள் என்பது இன்று வரை விடைதெரியாத புதிர்.
என்னவோ ஒரு இனம் புரியாத அன்பும் பாசமும் அவள் மேல் எனக்கு இருப்பதாகத் எப்போதும் தோன்றும். இதை என்றேனும் ஒரு நாள் அவள் புரிந்துகொள்ளக் கூடும். என்றாவது ஒரு நாள் என்னைக் கட்டிக் கொண்டு கதறக் கூடும். அந்த நாள் வரையில் என்னால் காத்திருக்க முடியும்.
"அம்மா காத்திண்டு இருப்பா. வா.. ஆத்துக்குப்போகலாம்.."ஜனனி சொன்னபோதுதான் என் சுய நினைவே திரும்பியது போல இருந்தது.
காவேரி சலனமில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தது.. அதைப் பார்க்கும்போது மனதில் ஏதோ ஒரு அமைதி தோன்றியது. எழுந்து செல்லவே மனமில்லாமல் இருந்தது. அடிக்கடி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அம்மாமண்டபத்தை விட்டு வெளியே செல்ல எத்தனித்தேன்.
அம்மா மண்டபம் அமைதியாக அத்தனையும் கவனித்துக்கொண்டிருக்கிறது. எத்தனை சலசலப்புகள் இருந்தாலும் அவை மனிதர்களுக்கு மட்டுமே. ஆனால் அம்மா மண்டபம் எப்போதும் போல அமைதியாக இருக்கிறது. காவேரி ஆறு சலனமே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. நாளைய வரவுக்காகக் காத்திருக்கிறது.